தமிழ்நாடு

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Published On 2024-06-29 01:59 GMT   |   Update On 2024-06-29 01:59 GMT
  • கூடலூர் தாலுகா பாடந்தொரை ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது.
  • பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது.

நீலகிரி:

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் நேற்று மாலை 3 மணி முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. கூடலூர் தாலுகா பாடந்தொரை ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது.

இதேபோல் ஆற்றுவாய்க்கால் கரையோரம் உள்ள கூட்டுறவு பால் சங்க அலுவலக கட்டிடத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஊழியர்கள் தண்ணீருக்குள் இறங்கி நடந்து சென்று பால் கேன்களை சுமந்து சென்றனர். இதேபோல் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் சேதம் அடைந்தன. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மழையின் தாக்கம் குறைந்த பின்னர் ஊருக்குள் புகுந்த வெள்ளம் வடிந்தது.

பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் பந்தலூர் பஜாரில் உள்ள சாலை, கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது. கனமழையால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் பந்தலூர் பஜார், கோழிக்கோடு-கூடலூர் சாலை, தாலுகா அலுவலகம் செல்லும் சாலை, கூவமூலா சாலையை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பந்தலூர் பகுதி வெள்ளக்காடாக மாறியது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News