தமிழ்நாடு (Tamil Nadu)

நடுரோட்டில் விழுந்த ராட்சத மரத்தை அகற்றும் பணி நடந்தபோது எடுத்தபடம் - சாலை திடீரென உள்வாங்கியதால் அங்கு வசித்த மக்களை மூங்கில் கம்புகள் கட்டி மீட்பு படையினர் மீட்ட காட்சி

குன்னூரில் கனமழை: ஆதிவாசி கிராமத்தில் திடீரென உள்வாங்கிய சாலை- 22 குடும்பத்தினர் பத்திரமாக மீட்பு

Published On 2023-11-25 06:30 GMT   |   Update On 2023-11-25 06:47 GMT
  • கோவையில் இருந்து 31 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் குன்னூருக்கு வருகை தந்துள்ளனர்.
  • செங்கல்புதூர் ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலையில் 50 அடி அகலத்திற்கும் 20 அடி ஆழத்திற்கும் திடீரென நிலம் உள்வாங்கியது.

அருவங்காடு:

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மண் மற்றும் பாறைகள் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவும் மழை பெய்தது. இந்த மழைக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர் அருகே திடீரென ராட்சத மரம் முறிந்து விழுந்தது.

தகவல் கிடைத்தவுடன் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் பாலச்சந்திரன் தலைமையிலான குழுவினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் இந்த வழித்தடத்தில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. மேலும் மலைப்பாதையில் மண்சரிவு தொடர்வதால் 24 மணி நேரமும் போலீசார், நெடுஞ்சாலை, தீயணைப்பு, மருத்துவம், மற்றும் வருவாய் துறையினர் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே கோவையில் இருந்து 31 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் குன்னூருக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குன்னூர் அருகே ஆனைப்பள்ளம் ஆதிவாசி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குரும்பர் மற்றும் இருளர் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

நேற்று பெய்த கன மழையில் ஆனைப்பள்ளம் பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் சாலையில் மிகப்பெரிய மண் சரிவு ஏற்பட்டது.

இதனால் அந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க இயலாமல் அவதியுற்று வருகின்றனர்.

இதனிடையே செங்கல்புதூர் ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலையில் 50 அடி அகலத்திற்கும் 20 அடி ஆழத்திற்கும் திடீரென நிலம் உள்வாங்கியது. இதனால் அங்குள்ள 22 ஆதிவாசி குடும்பங்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

இந்த தகவல் அறிந்ததும் குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மூங்கில் மற்றும் கற்களைக் கொண்டு தற்காலிக பாலம் அமைத்து அங்குள்ள ஆதிவாசிகளை மீட்டு அருகில் உள்ள செங்கல்புதூர் கிராமத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தனர்.

இன்று காலை முதல் மீண்டும் மேகமூட்டத்துடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. மழையுடன் குளிரும் வாட்டி வதைக்கிறது.

இதன் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் தேயிலை மற்றும் மலைத்தோட்ட காய்கறிகளை அறுவடை செய்ய இயலாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போய் உள்ளனர். அவ்வப்போது ஏற்படும் மின்தடையால் நகர மட்டுமல்லாமல் கிராம பகுதிகளும் இருளில் மூழ்கி வருகிறது.

Tags:    

Similar News