எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் கனமழை- சாலையில் விழுந்த ராட்சத மரத்தால் போக்குவரத்து பாதிப்பு
- உயர் அழுத்த மின் கம்பிகள் மீது மரம் முறிந்து விழுந்ததால் நகர் முழுதும் மின்தடை ஏற்பட்டது.
- பிரதான சாலையில் பெரிய அளவிலான ராட்சத மரம் விழுந்ததால் அங்கு ஒரு வழிபாதையில் போக்குவரத்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
எடப்பாடி:
கடந்த சில தினங்களாக எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைப்பொழிவு ஏதும் இன்றி வறண்ட வானிலை நிலவி வந்தது. பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், நகர் முழுவதும் அனல் காற்று வீசியது.
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை இரவு) திடீரென இடி, மின்னலுடன் பலத்த சூறைக்காற்று வீசியது. அதனை தொடர்ந்து பெய்த கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பலத்த காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல், எடப்பாடி அடுத்த கேட்டுக்கடை பகுதியில் எடப்பாடி-சேலம் பிரதான சாலையின் குறுக்கே ராட்சத மரம் முறிந்து விழுந்தது. உயர் அழுத்த மின் கம்பிகள் மீது மரம் முறிந்து விழுந்ததால் நகர் முழுதும் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் எடப்பாடி நகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையின் குறுக்கே விழுந்த மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதான சாலையில் பெரிய அளவிலான ராட்சத மரம் விழுந்ததால் அங்கு ஒரு வழிபாதையில் போக்குவரத்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நகரின் பல இடங்களில் மின் பாதைகளில் பழுது ஏற்பட்டதால் தொடர்ந்து நள்ளிரவு வரை நகர் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது. இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.