மீஞ்சூர் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்- சென்னை மின்சார ரெயில் நடுவழியில் நிறுத்தம்
- தொடர்ந்து அடுத்தடுத்து ரெயில்கள் வந்ததால் நீண்ட நேரம் கேட் மூடி இருந்தது.
- ரெயில்வே கேட்டின் இருபக்கம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
பொன்னேரி:
மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே மேம்பால பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மீஞ்சூரில் இருந்து காட்டூர், தந்தை மஞ்சி, உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.
ரெயில்கள் வரும்போது கேட் மூடப்படும் நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணிஅளவில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததை தொடர்ந்து ரெயில்வே கேட் மூடப்பட்டது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து ரெயில்கள் வந்ததால் நீண்ட நேரம் கேட் மூடி இருந்தது. இதனால் ரெயில்வே கேட்டின் இருபக்கம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிறிது நேரத்தில் ரெயில்வே கேட் திறந்தாலும் இருபக்கமும் இருந்த வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்தனர்.
இதற்கிடையே வாகனங்கள் அனைத்தும் ரெயில்வே கேட்டை கடந்து செல்வதற்கு முன்பே சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் மின்சார ரெயில் வந்தது. ஆனால் கடும் வாகன நெரிசல் காரணமாக ரெயில்வே கேட்டை மூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ரெயிலுக்கு சிக்னல் வழங்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயில் நந்தியம் பாக்கத்திலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைநோக்கி சென்ற மின்சார ரெயில் மீஞ்சூர் ரெயில் நிலையத்திலும் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
சுமார் ½மணிநேரத்துக்கும் மேலாக மின்சார ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் ரெயில்சேவை பாதிக்கப்பட்டது.
பின்னர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து இருபக்கமும் நின்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி ஒவ்வொன்றாக கடந்து செல்ல செய்தனர். இதன் பின்னரே ரெயில்வே கேட்டை ஊழியர்களால் மூட முடிந்தது. இதைத்தொ டர்ந்து இரவு 8.45 மணியளவில் ரெயில் சேவை சீரானது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ரெயில்வே மேம்பால பணி மந்தமாக நடந்து வருகிறது. இதனை விரைந்து முடித்தால்தான் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். வரும் நாட்களில் பள்ளிகள் திறந்ததும் மேலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் என்றனர்.