தமிழ்நாடு

மேலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் கொலையில் கைதான 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்- மதுரை ஐகோர்ட்

Published On 2023-06-09 09:20 GMT   |   Update On 2023-06-09 09:20 GMT
  • இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் வாசுதேவனை படுகொலை செய்தனர்.
  • வாசுதேவன் கொலை வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி தனுஷ், வீரா, சுதர்சன் ஆகிய 3 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

மதுரை:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கம்பளிப்பட்டியை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் வாசுதேவன் (வயது19). மேலூர் அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை 2-ம் ஆண்டு படித்து வந்த இவர் கடந்த மார்ச் மாதம் கோட்டைப்பட்டி விலக்கு அருகே தனது நண்பர் பாலகண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் வாசுதேவனை படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில் பூதமங்கலம் கிராமத்தில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருந்த வந்த முன்விரோதத்தில் வாசுதேவன் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த கொலை தொடர்பாக மேலூரை சேர்ந்த பிரேம்குமார்(25), வீரா(19), தனுஷ்(20), சுதர்சன்(20), சரவணபுகழ் (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாசுதேவன் கொலை வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி தனுஷ், வீரா, சுதர்சன் ஆகிய 3 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் 3 பேரும் உளுந்தூர்பேட்டையில் தங்கி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தினமும் காலையும், மாலையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து, 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில், அவர்கள் மீது புதிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தனது உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

Similar News