தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ராணுவ வீரர் மீதான வழக்கு விசாரணைக்கு அதிகாரி நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2023-05-01 07:57 GMT   |   Update On 2023-05-01 07:57 GMT
  • எனது மகளுக்கு ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெயகுமார் என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
  • சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ராணுவ வீரர் மீதான வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீசாரின் செயல் கண்டிக்கத்தக்கது.

மதுரை:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

என் கணவர் கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைத்து வருகிறோம். என் மூத்த மகள் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் மூத்த மகள் பள்ளிக்கு செல்லும்போது இதே பகுதியை சேர்ந்தவரும், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான ஜெயகுமார் என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதனால் பள்ளிக்கு செல்லமாட்டேன் எனக்கூறி, மன உளைச்சலில் என் மகள் இருந்தார். இதற்கிடையே எங்கள் வீட்டு செல்போனுக்கு தொடர்ந்து அருவெறுக்கத்தக்க குறுஞ்செய்தியை அனுப்பி ஜெயகுமார் தொந்தரவு செய்துகொண்டே இருந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது புகாரின்பேரில் வழக்குபதிவு செய்யும்படி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் முறையிட்டேன். அதன்பின் ஒரு மாதம் கழித்து கடந்த டிசம்பர் மாதத்தில் ஜெயகுமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் அந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் 5 மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனர். எனவே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஜெயகுமார் மீதான பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ராணுவ வீரர் மீதான வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீசாரின் செயல் கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி ஜூன் மாதம் 1-ந்தேதி இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News