தமிழ்நாடு

வனத்துறையினருக்கு 37 நாட்களாக போக்கு காட்டிய புலி சிக்கியது எப்படி? நிம்மதியடைந்த கிராமமக்கள்-பரபரப்பு தகவல்கள்

Published On 2023-08-10 08:37 GMT   |   Update On 2023-08-10 08:37 GMT
  • ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
  • தற்போது புலி நலமாக உள்ளது. அதை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளோம்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் பேச்சி பாறை அருகே சிற்றார் ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் கடந்த ஜூலை மாதம் 3-ந்தேதி ஆடு ஒன்றை புலி கடித்துக் கொன்றது. அடுத்தடுத்து 6 ஆடுகள் மற்றும் 2 மாடுகளை புலி கொன்றதால் பொது மக்கள் அச்சமடைந்தனர். அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். புலி நடமாட்டம் உள்ள பகுதியாக கருதப்பட்ட இடங்களில் கூண்டு மற்றும் கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் புலி சிக்கவில்லை.

ட்ரோன் கேமரா, எலைட்படையினர் மூலமாகவும் தேடுதல் வேட்டை நடத்தினர். 10 நாட்களுக்கு மேலாக தேடியும் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த எலைட் படையினரும், மருத்துவ குழுவினரும் திரும்பி சென்றனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பத்துகாணி அருகே ஒரு நூறாம் வயல் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்து 4 ஆடுகளை புலி கடித்துக் கொன்றது. இதுபற்றிய தகவல் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையிலான குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கேயே முகாமிட்டு புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். முதுமலை புலிகள் சரணாலயத்தில் இருந்து வனத்துறையை சேர்ந்த பழங்குடியினர் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடந்தது.

இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் கல்லறைவயல் பகுதியில் புலி நடமாட்டத்தை வனத்துறையினர் பார்த்தனர்.

இதைத்தொடர்ந்து புலியை தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது புலி அந்த பகுதியில் உள்ள குகைக்குள் சென்றது. புலியை பொருத்தமட்டில் பகல் நேரங்களில் ஓய்வு எடுக்கும். இரவு நேரங்களில் மட்டுமே வெளியே சுற்றி தெரியும்.

பகல் நேரத்தில் புலி குகைக்குள் சென்றதால், அது வெளியே வருவதற்கு நீண்ட நேரமாகும், அங்கேயே ஓய்வெடுக்கும் என்று வனத்துறையினர் கருதினார்கள். இதைத்தொடர்ந்து அந்த குகையின் வெளியே வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரமாக புலியை பிடிக்க வியூகங்கள் வகுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மயக்க ஊசி மூலமாக புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புலி இருந்த குகைக்குள் மயக்க ஊசி செலுத்தினார்கள். அதில் புலி மயக்கமடைந்தது. பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு வனத்துறையினர் குகைக்குள் சென்று புலியை பிடித்தனர்.

பிடிபட்ட புலியை வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சாலை பகுதிக்கு தூக்கி வந்தனர். தொடர்ந்து புலியை கூண்டுக்குள் அடைத்து டெம்போவின் ஏற்றி பேச்சிப்பாறை சோதனை சாவடிக்கு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவ குழுவினர் மீண்டும் புலியை பரிசோதனை செய்தனர். புலி பிடிபட்டது குறித்து அந்த பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு தெரியவந்தது. இதைக் கேட்டு அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

பிடிபட்ட புலி கடந்த 37 நாட்களாக வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் சுற்றி திரிந்தது. சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியதையடுத்து அதன் எதிர்புறம் உள்ள பத்துகாணி பகுதிக்கு புலி வந்துள்ளது. சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே புலி சுற்றி திரிந்தபடி இருந்துள்ளது.

பிடிபட்ட புலியை வனத்துறையினர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதையடுத்து இரவோடு இரவாக வன அதிகாரி இளையராஜா தலைமையில் புலியை ஒரு வாகனத்தில் ஏற்றி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

பலத்த பாதுகாப்புடன் புலி கொண்டு செல்லப்பட் டது. புலியை கொண்டு சென்ற வாகனம் மிகவும் மெதுவாகவே சென்றது. நேற்று மாலை 6 மணிக்கு பேச்சிபாறையிலிருந்து புலியை ஏற்றி புறப்பட்ட வாகனமானது, இன்று காலை 11 மணியளவில் வண்டலூர் உயிரியல் பூங்கா விற்கு சென்றடைந்தது. அங்கு புலியை முறைப்படி ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறியதாவது:-

குமரி மாவட்டத்தின் மலையோர பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இரண்டு இடங்களில் கூண்டு மற்றும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபட்டோம். ஆனால் புலி சிக்கவில்லை.

அதே வேளையில் புலியின் கால் தடங்கள் ஒரு சில இடங்களில் கிடைத் தது. அதை வைத்து பார்த்த போது வயதான புலி என்பது தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பத்துகாணி பகுதியிலும் புலி அட்டகாசம் செய்தது. இதனால் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. நேற்று மதியம் புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. புலியும் கண்ணில் தென்பட்டது.

உடனே அதை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தோம். அப்போது புலி அந்த பகுதியில் உள்ள குகைக்குள் சென்றது. குகைக்குள் சென்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளோம். பிடிபட்ட புலிக்கு 13 வயது இருக்கும். தற்போது புலி நலமாக உள்ளது. அதை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News