தமிழ்நாடு

ஆன்லைனில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?

Published On 2022-10-09 03:41 GMT   |   Update On 2022-10-09 03:41 GMT
  • பட்டா மாறுதலுக்கு பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பம் செய்யும் வசதியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி வைத்தார்.
  • ஆன்லைன் முறையில் பட்டா மாறுதல் வசதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இ-சேவை மையத்திற்கும், தாலுகா அலுவலகத்திற்கும் அலைய தேவையில்லை.

மதுரை:

அரசின் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் பல துறைகளின் சேவைகள் ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளன.

குறிப்பாக சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் முழுமையாக ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளன. உள்ளாட்சி துறை மூலம் வழங்கப்படும் பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை www.crstn.org என்ற இணையதளத்தில் இருந்து பொதுமக்கள் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.

அதேபோல் வருவாய் துறை சார்பில் வழங்கப்படும் சாதி, வாரிசுதாரர், இருப்பிடம், வருமானம் உள்பட பல்வேறு சான்றிதழ்களை பொதுமக்கள் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இது தவிர https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் நேரிடையாக விண்ணப்பம் செய்யலாம்.

இந்த நிலையில் பட்டா மாறுதலுக்கு பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பம் செய்யும் வசதியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்படி பொதுமக்கள் எளிதாக பட்டா மாறுதலுக்கு வீட்டில் இருந்தபடியே மனு செய்யலாம்.

பட்டா மாறுதலை பொறுத்தவரை உட்பிரிவற்ற பட்டா மாறுதல், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என இருவகை உள்ளது. ஒருவர் தன்னுடைய பட்டாவில் உள்ள முழு நிலத்தை, முழுவதுமாக ஒருவருக்கு விற்பனை செய்தால், அது உட்பிரிவற்ற பட்டா மாறுதல் ஆகும். அதுவே அந்த நிலத்தை பகுதி, பகுதியாக பிரித்து விற்பனை செய்தால் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் செய்ய வேண்டும்.

தற்போது ஒருவர் பத்திரம் பதியும் போது உட்பிரிவு இல்லாத நிலங்கள் அனைத்திற்கும், பத்திரப்பதிவு துறையில் இருந்து வருவாய் துறைக்கு குறிப்பு அனுப்பப்பட்டு உடனடியாக பட்டா மாறுதல் செய்யப்படுகிறது. உட்பிரிவு இனங்களுக்கு பொதுமக்கள் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதே போல் கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட உட்பிரிவு இல்லாத இனங்களுக்கும் இ-சேவை மையம் மூலமே விண்ணப்பிக்கும் நிலை இருந்தது. இ-சேவை மையம் மூலம் பொதுமக்கள் பட்டா விண்ணப்பம் செய்வதற்கு கால விரயம் ஏற்படுகிறது. சரியான ஆவணங்கள் அங்கு கொண்டு செல்லாவிட்டால், சில நேரங்கள் பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்ய ஒரு நாள் கூட ஆகிவிடுகிறது.

இந்த நிலையில் தான் தமிழக அரசு, பொதுமக்களின் வசதிக்காக எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்ய www.tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள சேவையை அறிமுகம் செய்து உள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே மனு செய்யலாம். இந்த இணையதளத்திற்கு சென்றவுடன்முதலில் உங்களது பெயர், செல்போன் எண், இ-மெயில் முகவரியை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அதன்பின் பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டியது உட்பிரிவற்ற பட்டா மாறுதல் அல்லது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என்பதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

அதன்பின் உங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து நிலத்தின் விவரங்களை குறிப்பிட வேண்டும். அது எந்த மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே நம்பர் மற்றும் சப்-டிவிஷன் நம்பரை பதிவு செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து இந்த நிலம் உங்களுக்கு சொந்தமானதற்கு என்பதற்கான சான்றாக கிரைய பத்திரம் உள்பட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இறுதியாக உட்பிரிவற்ற பட்டா மாறுதலுக்கு வரிகள் இல்லாமல் ரூ.60-ம், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலுக்கு ரூ.460-ம் கட்டணம் செலுத்த வேண்டும். அதன்பின் உங்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு அனுப்பப்படும். அவர் மூலம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை நடத்தி பட்டா மாறுதல் செய்வார்கள்.

ஆன்லைன் முறையில் பட்டா மாறுதல் வசதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இ-சேவை மையத்திற்கும், தாலுகா அலுவலகத்திற்கும் அலைய தேவையில்லை. சரியான ஆவணங்களை வழங்குவதால், உடனடியாக பட்டா மாறுதல் செய்யப்படும். சரியான காரணங் கள் இல்லாமல், உங்களது மனு திருப்பி அனுப்படமாட்டாது. எனவே லஞ்சம் கொடுப்பதும் தடுக்கப்படுகிறது.

பட்டா மாறுதலுக்கான ஆவணங்கள்

(ஏதாவது ஒன்று)

1. கிரையப் பத்திரம்.

2. செட்டில்மெண்ட் பத்திரம்

3. பாகப்பிரிவினை பத்திரம்

4. தானப்பத்திரம்

5. பரிவர்த்தணை பத்திரம்

6. விடுதலை பத்திரம்

இதர ஆவணங்கள்

(ஏதாவது ஒன்று)

ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை

குடியிருப்பு ஆவணங்கள்

(ஏதாவது ஒன்று)

ஆதார் அட்டை, தொலைப்பேசி ரசீது,

மின் கட்டணம், சமையல் எரிவாயு ரசீது, பாஸ்போர்ட்,

வாக்காளர் அடையாள அட்டை.

Tags:    

Similar News