தமிழ்நாடு

ஐஸ்கிரீம் விலை ரூ.5 உயர்வு: நாளை முதல் அமலுக்கு வருகிறது

Published On 2024-03-02 06:45 GMT   |   Update On 2024-03-02 06:45 GMT
  • கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அதிரடியாக ஐஸ்கிரீம் விலையை உயர்த்தி இருக்கிறது.
  • ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐஸ்கிரீம் உள்பட பால் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கோடை காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் பால் பொருட்களுக்கு வழக்கத்தை விட தேவை அதிகரிக்கும்.

தற்போது கோடை காலம் உச்சத்தை எட்ட தொடங்கி இருக்கிறது. அடுத்த வாரம் முதல் வெயில் அளவு கடுமையாக உயரும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதனால் ஐஸ்கிரீம் விற்பனை கணிசமாக உயர வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அதிரடியாக ஐஸ்கிரீம் விலையை உயர்த்தி இருக்கிறது. இது தொடர்பாக ஐஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கு கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் நேற்று முன்தினம் கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில் 4 வகையான ஐஸ்கிரீம் விலையை உயர்த்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 65 எம்.எல். எடை கொண்ட சாக்கோ பார் ஐஸ்கிரீம் விலை ரூ.20-ல் இருந்து ரூ.25ஆக அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல 125 எம்.எல். எடை கொண்ட பால் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.

100 எம்.எல். எடை கொண்ட கிளாஸ்சிக் கோன் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அது போல கிளாஸ்சிக் கோன் சாக்லெட் ஐஸ்கிரீமும் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக உயர்ந்துள்ளது.

ஐஸ்கிரீம் விலை உயர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வருவதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்று தெரிகிறது.

ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பால் உபபொருட்களின் விற்பனை விலையை நேரடியாகவும், பால் விற்பனை விலையை மறைமுகமாகவும் கடந்தாண்டு வரலாறு காணாத வகையில் உயர்த்திய ஆவின் நிர்வாகம் நடப்பாண்டில் நாளை (3-ந் தேதி) முதல் ஐஸ்கிரீம் விற்பனை விலையை உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

ஏனெனில் தனியார் பால் நிறுவனங்கள் பலவும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை விலையை குறைப்பது, பல்வேறு சலுகைகள் வழங்குவது என செயல்பட்டு வரும் சூழலில் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போலிருக்கிறது.

மேலும் தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதலில் கவனம் செலுத்தாமல், வடமாநிலங்களில் இருந்து பால் பவுடர், வெண்ணெய் கொள்முதல் செய்து அதன் மூலம் பணம் ஈட்டி, தங்களின் கஜானாவை நிரப்பிக் கொள்வதில் அக்கறை காட்டும் ஊழல் அதிகாரிகளால் ஆவின் நிர்வாகம் சிதிலமடைந்து வரும் நிலையில் இதுபோன்ற விற்பனை விலை உயர்வு அறிவிப்புகள் ஆவினுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் எச்சரிக்கையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

அத்துடன் பால் வளத்துறை அமைச்சரும், ஆவின் நிர்வாக இயக்குனரும் அதிகாரிகள் மட்டத்தில் குளிர்சாதன அறைகளில் அமர்ந்து கொண்டு ஆலோசனை கூட்டம் என்கிற பெயரில் மக்களின் வரிப்பணத்தை, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பால் வரும் வருமானத்தை வீணடிப்பதை நிறுத்திவிட்டு களத்தில் இறங்கி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் நடப்பாண்டின் கோடை காலத்தில் ஆவின் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News