காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் ; ஜாக்டோ-ஜியோ தீர்மானம்
- பிப்ரவரி 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்
- 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலியாக இருக்கும் 30 சதவீதத்திற்கும் மேலான இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ குழு போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்டம், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைபாளர்கள் அ.மாயவன், ஆ. செல்வம், ச.மயில் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு, பிப்ரவரி 15ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால்பிப்ரவரி 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது