சிறையை தகர்த்து கைதியை மீட்க திட்டமிட்ட ஐ.எஸ். ஆதரவாளர்கள்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
- கோவை கார் குண்டு வெடிப்பில் பலியான முபின் மற்றும் 2 கூட்டாளிகள் கேரள ஜெயிலில் இருந்து அசாருதீனை அடிக்கடி சந்தித்து பேசி உள்ளனர்.
- கார் குண்டு வெடிப்பு வழக்கில் முகமது அசாருதீன் 13-வது நபராக கைது செய்யப்பட்டு உள்ளார்.
கோவை:
கோவை கோட்டை மேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக இருந்த இவர் காரில் வெடிபொருட்களை நிரப்பி வெடிக்கச் செய்து கோவையில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த திட்டம் நிறைவேறாமல் தான் தீட்டிய சதியில் தானே சிக்கி பலியானது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான முபினுடன் நெருங்கி பழகியவர்கள், கார் வாங்கி கொடுத்தவர்கள், வெடிபொருட்கள் வாங்கி கொடுத்தவர்கள், சதி திட்டம் தீட்டியவர்கள் என இதுவரை 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதன்பிறகும் தொடர்ந்து சோதனை, விசாரணை என வழக்கு நீண்டுகொண்டே செல்கிறது. இந்தநிலையில் கோவை உக்கடம் அன்புநகரைச் சேர்ந்த முகமது அசாருதீன் (36) என்பவருக்கு கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் சில காலம் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
அதன்பிறகு ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு கேரள ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். ஜெயிலில் இருந்தாலும் இவருக்கு கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கிலும் தொடர்பு இருந்ததை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்பேரிலேயே நேற்று முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
கைதான முகமது அசாருதீன் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2019-ம் ஆண்டு இலங்கையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவர் ஜஹ்ரான் பின் காசிம் என்பவர். ஐ.எஸ். சித்தாந்த எண்ணம் கொண்ட இவரால் தற்போது கைதாகி உள்ள முகமது அசாருதீன் ஈர்க்கப்பட்டு உள்ளார். அதன்பிறகு முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அவருடன் அசாருதீன் தொடர்பில் இருந்துள்ளார்.
இலங்கை குண்டுவெடிப்புக்கு பின் ஐ.எஸ். ஆதரவாளர்களை பிடிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் தென்னிந்தியா முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் நடத்தப்பட்ட சோதனையில் முகமது அசாருதீன் சிக்கினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விய்யூரில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கோவை கார் குண்டு வெடிப்பில் பலியான முபின் மற்றும் 2 கூட்டாளிகள் கேரள ஜெயிலில் இருந்து அசாருதீனை அடிக்கடி சந்தித்து பேசி உள்ளனர். அப்போது கார் குண்டுவெடிப்பு தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
மேலும் சத்தியமங்கலம் காட்டில் முபினும், அவரது கூட்டாளிகளும் ரகசிய கூட்டம் நடத்தி கார் குண்டுவெடிப்பு பற்றி ஆலோசனை நடத்தி உள்ளனர். அப்போது கேரள சிறையை தகர்த்து முகமது அசாருதீனை மீட்டுக் கொண்டு வந்து விடலாம் எனவும் அவர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
கார் குண்டு வெடிப்பு வழக்கில் முகமது அசாருதீன் 13-வது நபராக கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் மேலும் சிலர் கைது ஆவார்கள் என தெரிகிறது.