உடன்குடி பகுதியில் கருப்பட்டி உற்பத்திக்கான ஆரம்பகட்ட பணி தொடங்கியது
- இந்த ஆண்டு பதநீர் உற்பத்தி மிக மிக நன்றாக இருக்கும்.
- உடன்குடி பகுதியில் பல இடங்களில் பூமியில் உவர்ப்பு தண்ணீர் எல்லாம் சுவையாக மாறி உள்ளது.
உடன்குடி:
உடன்குடி என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது கருப்பட்டிதான். உடன்குடி கருப்பட்டி என்று ஊர் பெயரோடு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த கருப்பட்டி மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 5 மாதங்கள் மட்டுமே உற்பத்தியாகும். தற்போது கருப்பட்டி உற்பத்திக்காக கற்பக தரு என்று அழைக்கப்படும் பனை மரத்தில் தினசரி ஏறி இறங்குவதற்கு இடையூறாக உள்ள சின்ன சின்ன தடைகளை நீக்குதல், பனை மரத்தில் உள்ள சில்லாட்டை, காய்ந்த ஓலைகளை அப்புறப்படுத்தி, மட்டைகளை விரித்து விடுதல், இப்படி விரித்து விட்டால் பதநீர் தரும் பாளைகள் வேகமாக வெளிவரும் என்கிறார்கள்.
பின்பு பாளையை கயிற்றால் கட்டி, தட்டி, பக்குவப்படுத்தி பதநீர் தரும் பாளைகளாக மாற்றுவார்கள். இப்போது கருப்பட்டி உற்பத்திற்கான ஆரம்பக்கட்ட பணி தொடங்கி உள்ளது.
இதுபற்றி இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறியதாவது:-
கருப்பட்டி உற்பத்திக்காக ஆரம்ப கட்ட பணி தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு பதநீர் உற்பத்தி மிக மிக நன்றாக இருக்கும். கடந்த டிசம்பர் மாதம் மழை நன்றாக பெய்தது. பல இடங்களில் மழை நீர் பல மாதங்கள் தேங்கி இருந்தது. தற்போது குறைந்துள்ளது.
இதனால் உடன்குடி பகுதியில் பல இடங்களில் பூமியில் உவர்ப்பு தண்ணீர் எல்லாம் சுவையாக மாறி உள்ளது. அதனால் கருப்பட்டி உற்பத்தி மிக மிக அதிகமாக இருக்கும் என்று கூறினார்.