தமிழ்நாடு

கவர்னர் மாளிகை முன்பு குண்டுவீச்சு: சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை தெரிய வரும்: எல்.முருகன்

Published On 2023-10-27 07:35 GMT   |   Update On 2023-10-27 08:44 GMT
  • கவர்னர் மாளிகை முன்பு தாக்குதல் என்பது அரசியல் அமைப்பின் மீது நடத்திய தாக்குதல்.
  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தாலும் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மாட்டோம்.

நெல்லை:

நெல்லை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை இன்று சந்தித்தபோது கூறியதாவது:-

தமிழக கவர்னர் இல்லம் முன்பாக பெட்ரோல் குண்டு வீசிய வினோத் என்பவரை தி.மு.க. வழக்கறிஞர்கள் 2 பேர் தான் ஜாமின் எடுத்துள்ளனர். ஜாமின் எடுத்த இசக்கி பாண்டியன் மற்றும் நிசிந்த் 2 பேரும் தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது.

தமிழக ஆளுநருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. அப்படி இருக்கும்போது சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஆகி உள்ளது. ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசுவதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெட்ரோல் குண்டு வீசியவனுக்கு பின்னணியில் யார்? இருக்கிறார்கள். அந்த குற்றவாளியின் பின்புலம் என்ன என்பதை சி.பி.ஐ. விசாரித்தால்தான் முழுமையாக உண்மை நிலவரம் தெரியவரும்.

கோவையில் பாலஸ்தீன கொடியை ஏற்றுகிறார்கள். தமிழக காவல்துறை இதையெல்லாம் வேடிக்கை பார்க்காமல் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னர் மாளிகை முன்பு தாக்குதல் என்பது அரசியல் அமைப்பின் மீது நடத்திய தாக்குதல். தி.மு.க.வினருக்கு அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை கிடையாது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தாலும் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மாட்டோம். கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் இதுவரை எந்த மாநில அரசுகள் மீதும் கை வைத்ததில்லை. 356 பிரிவை பயன்படுத்தும் எண்ணம் இந்த அரசுக்கு கிடையாது. தமிழகத்தில் இன்று அரசியல் அமைப்பு சட்டம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தமிழக கவர்னர் மாளிகை வெளியே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு காவல்துறையை பொறுப்பில் வைத்துள்ள தமிழக முதலமைச்சர் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News