யோகா என்பது முன்னோர்கள் நமக்களித்த கொடை - எல்.முருகன்
- யோகா பயிற்சியின் மூலம் மன தைரியம், மன ஒருமைப்பாடு, மனநலம் ஆகியவை கிடைக்கப்பெறும்.
- யோகா பயிற்சி செய்து உடல் நலம், மனநலம் பெற்று சிறப்பாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
கோவை:
கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள கல்லூரியில் இன்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். 800-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து அவர் யோகா சனங்களை செய்தார்.
நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசியதாவது:-
யோகா என்பது நமது முன்னோர்கள் நமக்கு அளித்த கொடையாகும். யோகா பயிற்சியின் மூலம் மன தைரியம், மன ஒருமைப்பாடு, மனநலம் ஆகியவை கிடைக்கப்பெறும்.
இந்த யோகா பயிற்சியை நாம் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். குறிப்பாக வாழ்வியல் மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கும் சிறப்பான கலையாக யோகா உள்ளது.
இளைஞர்கள் இந்த யோக கலையை வாழ்வின் அங்கமாக கடைபிடித்து, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் யோக பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். யோகா பயிற்சி செய்து உடல் நலம், மனநலம் பெற்று சிறப்பாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.