- கண்ணெதிரில் ஒரு பொது இடம் இப்படி நாசமாவதை பார்த்து அந்த பகுதி மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்.
- பசுமையை மீண்டும் மீட்டு தந்தால் போதும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒரு இடத்தை சுத்தமாக பராமரிக்க சுற்றிலும் வேலி அமைத்து அத்துமீறி நுழைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு பலகையும் தொங்கவிட்டிருப்பார்கள்.
ஆனால் இருந்த வேலியை அகற்றி அத்துமீறி எதை வேண்டுமானாலும் செய்ய வாய்ப்பு வழங்குவார்களா? சுவாமி. என்ன நாரதா சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாய். இப்படி யார் செய்வார்கள்? நான் சும்மாவா சொல்கிறேன்! இப்படியும் செய்கிறார்கள் சுவாமி. மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையம் அருகில் சிருங்கேரி மடம் சாலை உள்ளது. இந்த சாலை அருகில் உள்ள திறந்தவெளி நிலத்தை அப்படியே விட்டு வைத்தால் ஆக்கிரமிப்பு, குப்பை குவியல் என்று அந்த இடமே அலங்கோல மாகிவிடும் என்று யோசித்த ஜெத்நகர் குடியிருப்புவாசிகள் 7 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே நிர்வாகத்துடன் பேசி சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்க செய்துள்ளார்கள். பாதுகாப்பு வேலி இருந்ததால் மரக்கன்றுகளையும் நட்டிருக்கிறார்கள்.
இதனால் அந்த பகுதி பசுமை பூங்கா போல் காட்சியளித்தது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி அந்த இடத்தை உரம் தயாரிப்பதற்கும், கைப்பற்றப்படும் பொருட்களை போட்டு வைப்பதற்காகவும் பயன்படுத்த தொடங்கி இருக்கிறது. இதனால் பாதுகாப்பு வேலியும் அகற்றப்பட்டுவிட்டது.
முறையாக பராமரிக்காததால் அந்த இடத்தில் மக்கள் கழிவு பொருட்களை போட தொடங்கினார்கள். மோசமான சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் என்று தேவையற்ற பொருட்கள் போடும் இடமாக மாறியது.
குடிமகன்களுக்கு புகலிடமாகவும், இலவச சிறுநீர் கழிப்பிடம் போலவும் மாறிப்போன அந்த இடம் நாறிப்போனது. கஷ்டப்பட்டு பராமரித்த இடம் இப்படி நாசமாக்கப்படுகிறதே என்று சமூக அக்கறை கொண்ட சிலர் ஆதங்கப்பட்டனர். அவர்கள் ரெயில்வே துறையை அணுகி பாதுகாப்பு வேலி போட்டு பராமரிக்கும்படி வேண்டுகோள் வைத்து இருக்கிறார்கள். ஆனால் ரெயில்வே நிர்வாகம் இதுவரை அதை கண்டு கொள்ளவில்லை.
கண்ணெதிரில் ஒரு பொது இடம் இப்படி நாசமாவதை பார்த்து அந்த பகுதி மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்.
ரெயில்வே அதிகாரிகளோ விரைவில் இந்த பகுதியை பூங்காவாக மாற்றி தருகிறோம் என்று உறுதி அளித்து இருக்கிறார்கள்.
இழந்த பசுமையை மீண்டும் மீட்டு தந்தால் போதும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்ற நாரதர் மேலும் ஒரு தில்லாலங்கடி வேலையை பற்றி குறிப்பிட்டார்.