தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்தது

Published On 2024-07-30 06:06 GMT   |   Update On 2024-07-30 08:00 GMT
  • கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
  • காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு, மடிக்கேரி, மைசூரு, மாண்டியா மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில் கர்நாடகம் மற்றும் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை தனது முழுகொள்ளளவை எட்டியதை தொடர்ந்து உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

கே.ஆர்.எஸ். அணையின் மொத்த நீர்மட்டம் கொள்ளளவு 124.80 அடி உயரம் ஆகும். தற்போது 123.35 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 38,977 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 55,659 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

அதேபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்டம் உயரம் 84 அடி ஆகும். இந்த அணையில் தண்ணீர் முழுகொள்ளளவை எட்டிவிட்டது. இந்த அணைக்கு 30,805 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 24,667 கன அடி நீர் கபிலா ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் டி.நரசிப்புரா அருகே திருமாகூடலு பகுதியில் காவிரியில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

இன்று காலை 2 அணைகளில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரத்து 326 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் கரைபுரண்டபடி தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை கர்நாடகம்-தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 1,53,091 கன வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று மாலையில் 1,05264 கன அடியாக சரிந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் நீர்வரத்து 70,257 கன அடி சரிந்த நிலையில் காலை 8 மணிக்கு நீர்வரத்து 62,870 கன கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 23 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு குறைவாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 118.84 அடி உயர்ந்தது. நீர் இருப்பு 91.63 டி.எம்.சி. இருந்தது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 41ஆயிரத்து 722 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு நீர்வரத்து இதே நிலையில் நீடித்தால் இன்று பிற்பகலில் மேட்டூர் அணை தனது முழுகொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை நிரம்பும் பட்சத்தில் உபரிநீர் காவிரி ஆற்றில் அப்படியே வெளியேற்றப்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர்இருப்பை பொறுத்து முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அணையின் நீர்மட்டம் 120 அடி நிரம்பும் தருவாயில் உள்ளது. எனவே இன்று மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து 137 நாட்களுக்கு பாசனத்தின் தேவைக்கு ஏற்ப திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News