திருவள்ளூர் மாவட்டத்தை புரட்டியெடுக்கும் கனமழை: காலை 10 மணி வரை வானிலை மையம் எச்சரிக்கை
- புழல் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மஞ்சம்பாக்கம், வடப்பெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து அனுமதி இல்லை.
- ஆவடியில் அதிகபட்சமாக 28 செ.மீ. கொட்டித்தீர்த்துள்ளது.
மிச்சாங் புயல் காரணமாக சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
புழல் ஏரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மஞ்சம்பாக்கம், வடப்பெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு 5,777 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், உபரிநீர் திறப்பு 2,000 கனஅடியில் இருந்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காலை 10 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு:
ஆவடி - 28 செ.மீ.
சோழவரம் - 20 செ.மீ
பொன்னேரி -19 செ.மீ
செங்குன்றம் - 17 செ.மீ
தாமரைப்பக்கம் - 17 செ.மீ
கும்மிடிப்பூண்டி - 15 செ.மீ
ஊத்துக்கோட்டை - 15 செ.மீ
திருவள்ளூர் - 15 செ.மீ
பூந்தமல்லி - 14 செ.மீ
ஜமீன் கொரட்டூர் - 12 செ.மீ
திருத்தணி - 12 செ.மீ
பூண்டி - 12 செ.மீ
திருவாலங்காடு - 10 செ.மீ
பள்ளிப்பட்டு - 6 செ.மீ
ஆர்கே பேட்டை - 4 செ.மீ