தமிழ்நாடு

மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பது தற்கொலைக்கு சமம்- அமைச்சர் துரைமுருகன்

Published On 2024-08-03 02:00 GMT   |   Update On 2024-08-03 02:00 GMT
  • தென்பெண்ணை ஆற்றில் மார்கண்டேயன் அணை கட்டுகிறார்கள்.
  • கனிமவளத்திற்கு மாநில அரசே வரி விதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கதக்கது.

வேலூர்:

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடி தாலுகா சேனூர் கிராமத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகமும் கர்நாடகாவும் மேகதாது அணை விவகாரத்தில் 38 முறை பேசியும் சுமுக தீர்வு ஏற்படவில்லை. இதனால் நடுவர் மன்றம் சென்றோம். நேரடியாக பட்டேலும், கருணாநிதியும், பிரதமராக இருந்த தேவேகவுடாவும் பேசியும் அப்போதே நடக்கவில்லை.

பேச்சால் இதற்கு தீர்வில்லை என நாங்கள் அறிவித்த பின்னர் அப்போது பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைத்தார். நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளோம்.

மறுபடியும் சென்று பேசினால் என்ன ஆகும் என கேட்டால் எல்லா வழக்கிலும் ஒன்றை கர்நாடகா கூறுவார்கள். பேசி தீர்க்கிறோம் என்றால் அது பிரச்சனைக்கு தீர்வாகாது.

தென்பெண்ணை ஆற்றில் மார்கண்டேயன் அணை கட்டுகிறார்கள். அதற்கும் நாம் நடுவர் மன்றம் கேட்டோம் ஆனால் அவர்கள் 2 ஆண்டுகளாகியும் இன்னும் பேசவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துகொள்ளலாம் என்பது தற்கொலைக்கு சமம்.

கனிமவளத்திற்கு மாநில அரசே வரி விதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கதக்கது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார். அருந்ததியர் உள் இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நாங்கள், செல்லும் என கூறியதை தான் அறிவித்தோம்.

வயநாடு விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா என்ன சொன்னார் என்பதை பினராயி விஜயன் படிக்கிறார். 'வரலாம் வெள்ளம் என சொல்லி உள்ளனர், அதில் பிரளயம் ஏற்படும் என கூறவில்லை'. இதில் பினராயி விஜயன் சொல்வதுதான் உண்மை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News