நோயாளியிடம் லஞ்சம் பெற்ற விவகாரம்- அம்பை அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
- அம்பை தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா மருத்துவர்கள் பணிகளுக்கு சரியாக வருகிறார்களா? என்று பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
- லஞ்சம் பெற்ற தற்காலிக பெண் ஊழியரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராமநாதன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் நுழைவு சீட்டு பெற ரூ.100 லஞ்சம் வாங்குவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.
இதையடுத்து அம்பை தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் பணிகளுக்கு சரியாக வருகிறார்களா? என்று பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கிருந்த தலைமை மருத்துவரிடம் ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாத காரணத்தினால் இங்கு வருகிறார்கள். அவர்களிடம் லஞ்சம் வாங்கக்கூடாது. அவர்களை நன்கு கவனிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்து சென்றார்.
இதற்கிடையே லஞ்சம் பெற்ற தற்காலிக பெண் ஊழியரை மாவட்ட சுகாதாரத்துறை (நலப்பணிகள்) துணை இயக்குனர் டாக்டர் ராமநாதன் 'சஸ்பெண்டு' செய்து உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி இந்த லஞ்ச பணத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை அறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.