மோட்டார் சைக்கிள் திருட்டு: இந்து முன்னணி நிர்வாகி உள்பட 2 பேர் கைது
- அண்மைக்காலங்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவை திருடு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
- கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கோவை:
கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் அண்மைக்காலங்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவை திருடு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
இது தொடர்பாக அதன் உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது. அதில் 2 பேர் மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவற்றை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிய தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது29), ஆறுமுகம் பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைதாகி உள்ள பாலகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவராக உள்ளார்.