திருமூலர் சொன்னதை வெளிநாட்டினரும் உணர்ந்து கொள்ள வைத்த முருகன் மாநாடு- நீதிபதி சிவஞானம்
- முத்தமிழ் முருகன் மாநாடு திருமூலரை எனக்கு நினைவுப்படுத்துகிறது.
- இறைவனை எத்தனையோ வகையில் பார்த்திருக்கிறார்கள்.
பழனி:
பழனியில் நடந்த முத்தமிழ் முருகன் மாநாட்டில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
முத்தமிழ் முருகன் மாநாடு திருமூலரை எனக்கு நினைவுப்படுத்துகிறது. அவனை ஒழிய அமரரும் இல்லை, அவன் இன்றி செய்யும் அருந்தவம் இல்லை, அவன் இன்றி ஆவதுமில்லை, அவனின்றி ஊர் போகுமாறு அடியேனே... என்ற திருமூலர் சொன்னதை ஆசியாவில் இருந்து வந்தவர்களும் வெளிநாட்டினரும் உணர்ந்து கொண்டுள்ளனர். அவன் இன்றி நாம் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்த்துவதன் பயன்தான் இந்த மாநாடு.
இறைவனை எப்படி எல்லாம் பாடுவோம் என்று நம்முடைய முன்னோர்களும், அறிஞர்களும் பாடிக்காட்டி இருக்கின்றார்கள். சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இறைவனை எத்தனையோ வகையில் பார்த்திருக்கிறார்கள்.
பொன்னுலகு வேண்டுமா பொருள் வேண்டுமா இவைகள் எல்லாம் அழிந்து போகும். அழியாத முத்தியும் வேண்டுமா வந்து பாருங்கள் என்று அனைவரும் வாருங்கள் முருகனிடம் வேண்டியதை பெற்றுக் கொள்ளுங்கள். பொன் பெற்றுக் கொள்ளுங்கள் பொருள் பெற்றுக் கொள்ளுங்கள் என வேண்டாம் என்றால் முத்தியும் பெற்றுக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் நீதிபதி சுப்பிரமணியன் பேசியதாவது:-
கடம்பத்து தன் பரங்குன்றத்து என்ற குறிப்பிடுதல் மூலம் திருப்பரங்குன்றத்தில் முருக பெருமான் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் என்ற குறிப்பு உள்ளது. இவ்வாறு அனைத்து பண்டைய தமிழ் நூல்களிலும் முருகனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. முத்தமிழும் முருகனும் என்றும் பிரிக்க முடியாதவை. அருணகிரிநாதர் புகழிலே கிட்டத்தட்ட 90 பாடல்களில் இந்த பழனி முருகனைப் பற்றி பாடி இருக்கிறார். அதில், 110-வது பாடல் திருப்புகலில் அருணகிரிநாதர் பாடுகிறார், அவனிதனிலே பிறந்து, மதலை எனவே தவழ்ந்து, அழகு பெறவே நடந்து, இளைஞனாய் அழகு மலையே விகழ்ந்து, முதலை மொழியை புகழ்ந்து, அது விதம் அதாய் வளர்ந்து, பதினாறாய் சிவகலைகள் ஆகமங்கள் மிகவும் அரியோர் அன்பு திருவடிகளை நினைத்து துதியாமல் இதுவரைக்கும், என அவரை பற்றி சொல்லியிருக்கிறார்.
இவ்வாறு முருகனை பற்றிய குறிப்புகள் பல தமிழ் நூல்களில் இருக்கின்றன. இவற்றை ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சி நடத்தி, ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து பல தமிழ் அறிஞர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அனைவரையும் ஒன்றிணைத்து இந்த மாநாட்டை நடத்துவது தமிழக அரசுக்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.