நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை 16-ந்தேதி மீண்டும் தொடக்கம்
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் சேவை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
- அந்தமானில் இருந்து சிவகங்கை கப்பல் கடந்த வாரம் நாகை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 -ம் தேதி காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி கப்பல் சேவையை தொடங்கி வைத்தார்.
ஆனால் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணம் காட்டி சேவை தொடங்கிய சில நாட்களிலேயே கப்பல் சேவை நிறுத்தப்பட்டதால் இரு நாட்டு சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் சேவை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு அந்தமானில் இருந்து சிவகங்கை கப்பல் கடந்த வாரம் நாகை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதைத்தொடர்ந்து இலங்கைக்கு கப்பல் சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் வரும் 16 -ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பதாக தனியார் கப்பல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இன்று நள்ளிரவு முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கப்பல் சேவை தொடங்க இருப்பதால் இருநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.