பாலியல் வழக்கில் காசிக்கு உடந்தை: தலைமறைவாக இருந்த நண்பர் கைது
- 3 ஆண்டுகளாக துபாயில் இருந்து வந்த ராஜேஷ் நேற்று சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.
- ராஜேஷ் கைது செய்யப்பட்டதையடுத்து வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் காசி (வயது 29). இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் குமரி மாவட்ட போலீசார் காசியை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஏராளமான இளம்பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து காசி மிரட்டி பணம் பறித்தது அம்பலமானது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு காசிக்கு உதவியதாக அவரது தந்தை தங்க பாண்டியனை கைது செய்தனர். அவரது நண்பர்கள் டைசன் ஜினோ, தினேஷ் கவுதம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஜாமீ னில் விடுதலை ஆனார்கள்.
இதையடுத்து காசி மீது தொடரப்பட்ட ஒரு பாலியல் வழக்கில் காசிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனால் காசி தொடர்ந்து ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். காசி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுவரை 7 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் காசியுடன் அவரது நண்பர் நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்த ராஜேஷ் என்ற ராஜேஷ்சிங் (43) என்பவர் மீதும் பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் வெளிநாட்டில் இருந்து வந்தார்.
இதையடுத்து அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இது தொடர்பாக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. 3 ஆண்டுகளாக துபாயில் இருந்து வந்த ராஜேஷ் நேற்று சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராஜேஷை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. 3 மணி நேரத்திற்கு மேலாக ராஜேஷிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை ஜெயிலில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் ராஜேஷ் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜேஷ் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் இந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.