தமிழ்நாடு

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவர்கள் 8 பேர் முதலிடம்

Published On 2024-06-05 04:50 GMT   |   Update On 2024-06-05 04:50 GMT
  • நாடு முழுவதும் மொத் தம் 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 (56.41 சதவீதம்) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • வங்காளம், உருது உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.

சென்னை:

நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4750 தேர்வுமையங்களில் மே 5-ந் தேதி நடைபெற்றது. இதில், 23.33 லட்சம் பேர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 200 தேர்வு மையங்களில் 1.52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். நாடு முழுவதும் தமிழ். ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஓடிசா, அஸ்ஸாமி, வங்காளம். உருது உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில் விடைத் தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்று, தேர்வு முடிவுகள் https://www.nta.ac.in என்ற இணையப் பக்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியானது. நாடு முழுவதும் மொத்தம் 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 (56.41 சதவீதம்) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதில் 67 மாணவர்கள் முழுமதிப் பெண்ணுடன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்னனர். தமிழகத்தைப் பொருத்த வரை சையது ஆரிபின் யூசுப், எஸ்.சைலஜா, ஆதித்ய குமார் பண்டா, பி.ஸ்ரீராம், பி.ரஜனீஷ், எம்.ஜெய்தி பூர்வஜா, ஆர்.ரோகித் எஸ்.சபரீசன் ஆகிய 8 பேர் முழு மதிப்பெண் பெற்று தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளனர்.

நடப்பு ஆண்டில் அதிக மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதால் கட்-ஆஃப் மதிப்பெண்ணும் உயர்ந்துள்ளது. அதன்படி, பொதுப் பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 720 முதல் 164 வரையான மதிப்பெண்களில் நாடு முழுவதும் 11 லட்சத்து 65 ஆயிரத்து 904 பேர் இடம் பெற்றுள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் 163 முதல் 129 வரையான மதிப் பெண்களில் 1 லட்சத்து 789 பேரும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் 163 முதல் 129 மதிப்பெண்களில் 48 ஆயிரத்து 804 பேரும் இடம் பிடித்துள்ளனர். பொதுப்பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாற்றுத்திறனாளிகளில் 163 முதல் 146 வரை மதிப்பெண்களில் 455 பேரும், பிசி, எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 145 முதல் 129 வரையான மதிப்பெண்களில் 336 பேரு இடம்பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News