தமிழ்நாடு

'ஊறுகாய் மாமியை கேள்வி கேட்டுட்டாரு' - GST கேள்விக்கு விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன்

Published On 2024-09-12 15:17 GMT   |   Update On 2024-09-12 15:17 GMT
  • Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி..
  • நான் எந்த யாருடைய விமர்சனத்துக்கும் கவலைப்படுவதாய் இல்லை என நிர்மலா சீதாராமன் விளக்கம்

கோவை:

கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும்.

அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

அவரின் வீடியோ வைரலான நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிர்மலா சீதாராமன் இதுகுறித்து விளக்கமளித்தார்.

அப்போது பேசிய அவர், "பன்னுக்கு வரி இல்லை. அதில் க்ரீம் போட்டுக் கொடுத்தால் வரி வேறு விதமாக இருக்கிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது என மிகவும் ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். இதை கேட்பவர்களுக்கு 'ஆஹா' என்பது போல இருக்கும். அதில் தவறு ஒன்றுமில்லை. அவரின் பாணியில் அவர் பேசியிருக்கிறார்.

அவர் இதை ஜனரஞ்சகமாக பேசியதால், ஜிஎஸ்டிக்கு பரம விரோதியாக இருப்போருக்கு அது ஆதாயமாக தெரியும். 'பார்த்தீங்களா ஊறுகாய் மாமியை கேள்வி கேட்டுட்டாரு. எல்லாரும் சிரிக்கறாங்க. அந்த அம்மாவுக்கு விசயம் தெரியுமா.' என்று சொல்வார்கள். நான் எந்த யாருடைய விமர்சனத்துக்கும் கவலைப்படுவதாய் இல்லை.

ஜிஎஸ்டியை எளிதாய், மக்களுக்கு சுமை இல்லாமல் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை யோசித்துக் கொண்டிருக்கிறோம். கவுன்சிலில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

ஜிஎஸ்டி கவுன்சிலில் தமிழ்நாட்டு அமைச்சரும் உறுப்பினராக உள்ளார். இந்த 7 ஆண்டுகளிலும், எந்த ஒரு முடிவும் யாரின் எதிர்ப்பை மீறி எடுக்கவில்லை. எல்லோரும் சேர்ந்துதான் முடிவு எடுப்போம். யாரும் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. நான் எதையும் முடிவு செய்யவில்லை. சமீபத்தில் கூட, மருத்துவ காப்பீட்டுக்கு வரி இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. உண்மையில் ஜிஎஸ்டிக்கு முன்பே மருத்துவ காப்பீட்டுக்கு வரி இருந்தது. அதை இப்போது குறைத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News