நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது - தப்பியது நெல்லை மேயர் பதவி
- நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு கூட்டரங்கு அமைக்கப்பட்ட நிலையில் ஒரு மாமன்ற உறுப்பினர் கூட பங்கேற்கவில்லை.
- நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கூட்டத்திற்கு கொடுக்கப்பட்ட கூடுதல் கால அவகாசமும் நிறைவடைந்தது.
நெல்லை:
தமிழகத்தில் பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான நெல்லை மாநகராட்சி 55 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது.
இந்த வார்டுகளில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 51 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் உள்ளனர்.
இந்நிலையில் மாநகராட்சி மேயராக சரவணன் பொறுப்பேற்ற நாள் முதல் அவருக்கும், தி.மு.க கவுன்சிலர்கள் சிலருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதன் காரணமாக தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த 38 கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து கடந்த மாதம் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவிடம் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஜனவரி 12-ந் தேதி (இன்று) நம்பிக்கை இல்லா தீர்மான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மாநகராட்சி ராஜாஜி மண்டபத்தில் நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்கிடையே மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அந்த தீர்மானம் வெற்றி பெற்றால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்று கட்சி தலைமை கருதியது.
இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ. ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து கவுன்சிலர்கள் அனைவரும் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையிலும், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையிலும் பல்வேறு குழுக்களாக பிரிந்து குற்றாலம், கன்னியாகுமரி, கொடைக்கானல் என சுற்றுலா புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே மாநகராட்சி கமிஷனரின் அறிவிப்பின்படி இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் கூட்டத்திற்கு கமிஷனர் தலைமை தாங்கி அனைத்து முடிவுகளையும் எடுப்பார். அவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. மேலும் மாநகராட்சி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில் காலை 11 மணிக்கு மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவராவ் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். மாநகராட்சி கூட்ட அரங்கில் வழக்கமாக மேயர், துணைமேயர் கமிஷனர் ஆகியோருக்கு மேடையில் தனி இருக்கை ஒதுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் மாநகராட்சி கமிஷனருக்கு மட்டுமே இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
கூட்ட அரங்கில் தீர்மானம் முன்மொழியப்படுவதற்கு முன்பு மாமன்ற உறுப்பினர்களுக்கு அருகே மேயர் மற்றும் துணைமேயருக்கு தனியாக இருக்கை ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998-ன் படி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு 5-ல் 4 பங்கு மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கிற்கு வந்திருக்க வேண்டும்.
நெல்லை மாநகராட்சியில் 55 மாமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் 5-ல் ஒரு பங்கு அதாவது 44 உறுப்பினர்கள் கூட்டரங்கில் இருந்தால் மட்டுமே நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்டம் நடத்தப்படும். ஆனால் இன்றைய கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை.
இதற்கிடையே நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கூட்டத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் காலை 11.30 மணி முடிவடைந்தது. இதனால் நம்பிக்கை இல்லா தீர்மான கூட்டத்தில் பெரும்பான்மைக்கான மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காத நிலையில் கூட்டம் நடைபெறாமலேயே தீர்மானம் தோல்வி அடைந்ததாக கமிஷனரால் அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் முன்மொழியப்படாமல் தீர்மானம் தோல்வி அடைந்தாலும் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மினிட் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு தீர்மான கூட்டத்தின் நிகழ்வு குறித்த அறிக்கையும் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் மேயர் சரவணன் பதவி தப்பியது.