தமிழ்நாடு (Tamil Nadu)

ஓ.பன்னீர்செல்வம் போலி அரசியல்வாதி- திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் பேச்சு

Published On 2022-12-27 08:27 GMT   |   Update On 2022-12-27 08:27 GMT
  • அ.தி.மு.க.வில் இருந்து போனவர்கள் போனவர்களாகவே இருக்கட்டும். பழையன கழிந்தால் தான் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியும்.
  • ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு போனவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்கக்கூடாது.

சென்னை:

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று நடந்தது.

இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் என 120 பேர் கலந்து கொண்டனர். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது, பூத் கமிட்டி அமைப்பது, முகவர்களை தேர்வு செய்வது போன்றவை குறித்து இதில் விவாதித்து முடிவு எடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் கடந்த வாரம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டதால், இந்த கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பதிலுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்து பேசினார்கள்.

கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன் பேசும்போது, "அரசியலில் போலி என்றால் அது ஓ.பன்னீர் செல்வம்தான். வழக்கமாக நாம் பொருட்களில் தான் போலியை பார்த்திருப்போம். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் போலி அரசியல்வாதி" என்று கூறினார்.

கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

அ.தி.மு.க.வில் இருந்து போனவர்கள் போனவர்களாகவே இருக்கட்டும். பழையன கழிந்தால் தான் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியும்.

ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு போனவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்கக்கூடாது. ஓ.பன்னீர் செல்வம் தன்னை தென் மண்டல தலைவராக முன்னிலைப்படுத்தி வந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அவரை பிரசாரம் செய்ய வருமாறு அழைத்தோம்.

ஆனால் அவர் போடி தொகுதியிலேயே வெற்றி பெறுவது போராட்டமாக இருக்கிறது. நான் எப்படி அங்கே பிரசாரத்துக்கு வர முடியும் என்றார். அவரை தென்மண்டல தலைவராக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் கூட்டத்தில் பேசிய பலரும் ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக விமர்சித்தனர். கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News