2-வது சீசனுக்கு தயாராகும் ஊட்டி: தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகிறது
- ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஏற்கெனவே 4 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தன.
- தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அப்போது தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி மற்றும் குன்னுார் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி ஆகியவை நடத்தப்படும்.
இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டும் மலர்க்கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நேரில் கண்டு களித்து ரசித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசன் களைகட்டுவது வழக்கம். இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் 2-வது சீசன் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
இதற்காக ஊட்டி பூங்காவில் ஏற்கனவே சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை உள்பட பல்வேறு நிறங்களில் 15 ஆயிரம் மலர்த்தொட்டிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.
ஊட்டி 2-வது சீசனுக்கு சிறப்பளிக்கும் வகையில் கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே, பெங்களூரு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்காமேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஆஸ்டர், வெர்பினா, ஜ5பின், கேண்டிடப்ட் உள்பட 60 வகையான மலர்விதைகள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டு இருந்தன. அவை பூங்காக்களில் நடவு செய்யப்பட்டு உள்ளன. அவை தற்போது மலர்ந்து அழகுடன் காட்சி தருகின்றன.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஏற்கெனவே 4 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தன. அந்த செடிகளிலும் தற்போது பூக்கள் பூத்து குலுங்க தொடங்கி உள்ளன. ஊட்டி பூங்காவில் உள்ள பார்வையாளர் மாடங்களில், மலர் பூந்தொட்டிகளை தொங்க விடும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, ஆயுதபூஜை என தொடர்விடுமுறைகள் வருகின்றன. எனவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
ஊட்டியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக புல்வெளி மைதானம் சேதம் அடைந்து இருந்தது.
எனவே அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.