அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு இன்று மாலை நெல்லை வருகை
- குழு தனது பயணத்தை கடந்த 5-ந்தேதி தொடங்கிய நிலையில் மண்டல வாரியாக சென்று 10-ந்தேதி வரை கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.
- நேருஜி கலையரங்கில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்து கேட்பு கூட்ட நிகழ்ச்சியில் அந்த குழுவினர் பங்கேற்கின்றனர்.
நெல்லை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க பொதுமக்கள், தொழிலதிபர்கள், மீனவர்கள், தொழில் முனைவோர் என பலதரப்பட்டவர்களிடமும் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் அவர்களின் தேவைகளை அறிந்து அதனை வருகிற பாராளுமன்ற தேர்தலின்போது வாக்குறுதி களாக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கும் வண்ணம் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்படுகிறது.
அதன்படி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒன்றை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பிரிவு மாவட்டங்களில் நேரடியாக சென்று பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.
இந்த குழு தனது பயணத்தை கடந்த 5-ந்தேதி தொடங்கிய நிலையில் மண்டல வாரியாக சென்று 10-ந்தேதி வரை கருத்துக்களை கேட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்பதற்காக நெல்லை மண்டலத்தில் அந்த குழுவினர் இன்று மாலை சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
இதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து மதுரைக்கு வரும் அந்த குழு அங்கிருந்து கார் மூலமாக நெல்லை வருகிறது. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் பாளை நேருஜி கலையரங்கில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்து கேட்பு கூட்ட நிகழ்ச்சியில் அந்த குழுவினர் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், தொழிலதிபர்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.