பள்ளி சொத்துகளை மாணவர்கள் சேதம் செய்தால் பெற்றோரே பொறுப்பு- அதிரடி உத்தரவு
- தவறு செய்யும் மாணவர்களை திருந்த செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- திருந்தாத மாணவர்களை அருகில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு மாற்ற பரிந்துரை
சென்னை:
மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பி, அவற்றை பள்ளிகளில் அமல்படுத்தவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. அந்த தீர்மானங்களை பள்ளிகளில் அமல்படுத்தவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:
பள்ளிகளில் மாணவர்கள் புகைப் பிடிப்பது, பிற மாணவர்களை அடிப்பது, கேலி செய்வது, ஆசிரியர்களிடம் மரியாதை குறைவாக நடந்துகொள்வது என பலவிதமான தவறுகளை செய்கிறார்கள். அந்த மாணவர்களை திருந்த செய்வதற்கும், அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்கள் பள்ளி சொத்துக்களை சேதமடையச் செய்தால், அதற்கான பொறுப்பை பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ ஏற்க வேண்டும். அந்த சொத்துக்களை மாற்றி அமைத்து தரக்கூடிய பொறுப்பையும் அவர்கள் ஏற்க வேண்டும். தொடர்ந்து தவறு செய்து திருந்தாத மாணவர்களை, அருகில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு மாற்றலாம்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.