ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மீட்பு- சிறப்பு ரெயில் மூலம் சென்னை திரும்பும் பயணிகள்
- வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.
- பயணிகளுக்கு ரெயில்வே சார்பில் உணவு மற்றும் வாட்டர் பாட்டில் வழங்க ஏற்பாடு.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால், சாலை எங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில், திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்க வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் இரண்டு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு, ரெயிலில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையம் வந்தடைந்தனர்.
ரெயில் நிலையத்தில் இருந்து நடந்து வந்தவர்கள் வல்லூரில் இருந்து பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.
வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் மூலம் பயணிகள் அழைத்து வரப்படுகின்றனர். இந்த சிறப்பு ரெயில் நாளை காலை சென்னை வந்தடையும்.
சிறப்பு ரெயிலானது சற்று நேரத்தில் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.
பயணிகள் அனைவருக்கும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும், ரெயில்வே சார்பில் உணவு மற்றும் வாட்டர் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.