தமிழ்நாடு

சிறப்பு ரெயில்களில் செல்வதற்கு கட்டணம் நிர்ணயித்த தனியார் நிறுவனம்- அதிக பணம் வசூலிப்பதாக பயணிகள் அதிருப்தி

Published On 2023-11-06 06:56 GMT   |   Update On 2023-11-06 06:56 GMT
  • அனுமதி பெறுவதற்கு முன்பே தனியார் நிறுவனம் டிக்கெட் விற்பனையை தொடங்குவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • தீபாவளி பண்டிகை தேவையை பூர்த்தி செய்ய குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.

சென்னை:

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்கள் இருப்பதால் வழக்கமாக இயக்கப்படும் ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

சிறப்பு கட்டண ரெயில்களை தான் தெற்கு ரெயில்வே அறிவித்து வருகிறது. இது வழக்கமாக இயக்கப்படும் ரெயில் கட்டணத்தை விட அதிகமாகும்.

ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதால் ஏழை, நடுத்தர மக்கள் ரெயில்களை நாடுகின்றனர். ஆனால் ரெயில்வே நிர்வாகமும் தனியாரிடம் சிறப்பு ரெயில்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்கிறது.

சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் எர்ணாகுளத்திற்கு 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 3 ஜோடி சிறப்பு ரெயில்கள் பிரீமியம் கட்டணத்தில் இயக்கப்படும் என தனியார் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது.

அனுமதி பெறுவதற்கு முன்பே தனியார் நிறுவனம் டிக்கெட் விற்பனையை தொடங்குவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒப்புதல் பெறுவதற்கு முன்பே தனியார் நிறுவனத்தின் கோரிக்கை செயலாக்கத்தில் உள்ளது என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறி இருந்தாலும் இன்று (திங்கட்கிழமை) அனுமதி கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

சென்னையில் இருந்து 9, 10, 11-ந்தேதிகளில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கான டிக்கெட்டுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மறுபுறம் 10, 11, 12 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, நாகர்கோவில், விருதுநகர், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தனியார் நிறுவனம் அறிவித்துள்ள கட்டணம் குறித்து ரெயில் பயணிகள் அதிருப்தி அடைந்து தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் போர்ட்டல் நேற்று டிக்கெட் முன்பதிவு விருப்பத்தை முடக்கியது.

இது குறித்து அந்த நிறுவன ஊழியர் ஒருவர் கூறுகையில், "சென்னை மற்றும் திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்குவதாகவும் இந்த பயணங்களுக்கான முன்பதிவு விருப்பங்கள் இன்று மாலைக்குள் கிடைக்கும்" என்றும் தெரிவித்தார்.

மண்டல ரெயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.பாண்டியராஜா கூறுகையில், "தீபாவளி பண்டிகை தேவையை பூர்த்தி செய்ய குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும். இருப்பினும் பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்க தனியார் ஆபரேட்டருக்கு வசதி அளிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு 3 அடுக்கு ஏசி படுக்கைக்கு ரூ.2000, 2-ம் வகுப்பு படுக்கைக்கு ரூ.3000 என தனியார் நிறுவனம் கட்டணம் வசூலிக்கிறது" என்றார்.

சிவகாசியை சேர்ந்த காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலர் ஜெயசங்கர் கூறும்போது, தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக சென்னைக்கு செல்கின்றனர். ஆம்னி கட்டணத்தை குறைக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. சென்னையில் இருந்து செங்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசிக்கு 2 சிறப்பு ரெயில்கள் தேவை என்றார்.

Tags:    

Similar News