தமிழ்நாடு

ஏரியில் போட்டி போட்டு மீன் பிடித்த பொதுமக்கள்.

தம்மம்பட்டி அருகே ஏரியில் போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்ற பொதுமக்கள்

Published On 2023-08-07 03:55 GMT   |   Update On 2023-08-07 03:55 GMT
  • ஏரி கரை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
  • காலை 6 மணிக்கு தொடங்கிய மீன்பிடி திருவிழா காலை 9 மணியுடன் முடிவடைந்தது.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ளது கொண்டையம் பள்ளி. இங்கு சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் ஏராளமான மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

கட்லா, ரோகு, ஜிலேபி, அயிரை உள்ளிட்ட ஏராளமான மீன்கள் இந்த ஏரியில் உள்ளது. தற்போது ஏரியில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்களுக்கு மீன்பிடிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கொண்டையம் பள்ளி ஊர் பொதுமக்கள் ஏராளமான பேர் அதிகாலை முதலே ஏரி பகுதியில் குவிய தொடங்கினர்.

இதனால் ஏரி கரை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் காலை 6 மணியளவில் மீன்களை பிடித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏரிக்குள் இறங்கி பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர்.

காலை 6 மணிக்கு தொடங்கிய மீன்பிடி திருவிழா காலை 9 மணியுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஏரியில் பிடித்த மீன்களை பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர். இந்த மீன் பிடி திருவிழாவில் ஒருவருக்கு 12 கிலோ எடையுள்ள மீன் கிடைத்தது.

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மீன் பிடி திருவிழாவை பலரும் கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News