தமிழ்நாடு

பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் 75 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரித்து சாதனை

Published On 2024-06-30 02:11 GMT   |   Update On 2024-06-30 02:11 GMT
  • ரெயில்வே துறையின், ஐ.சி.எப். தொழிற்சாலை 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • தற்போது ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை:

சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில், இந்திய ரெயில்வே துறைக்கான ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கும் பெட்டிகள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மின்சார ரெயில் பெட்டிகள், விரைவு ரெயில் பெட்டிகள், விரைவு ரெயில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், சுற்றுலாவுக்கான ரெயில் பெட்டிகள் மற்றும் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் ஐ.சி.எப். தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியன் ரெயில்வே துறையின், ஐ.சி.எப். தொழிற்சாலை 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐ.சி.எப். தொழிற்சாலை ஒவ்வொரு ஆண்டும் அதன் தயாரிப்பின் தரத்தை மேம்படுத்தி வருகிறது. ஐ.சி.எப். தொழிற்சாலையில் 1957-58-ம் காலக்கட்டத்தில், ஆண்டுக்கு 74 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வந்தே பாரத் ரெயில், டெமு ரெயில், அதிவேக விபத்து மீட்பு ரெயில், சொகுசு ரெயிலான மகாராஜா விரைவு ரெயில் என பல்வேறு வடிவமைப்பிலான ரெயில்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், ஐ.சி.எப். இந்திய ரெயில்வே துறைக்கான 75 ஆயிரமாவது ரெயில் பெட்டி தயாரித்து சாதனைப்படைத்து உள்ளது. நிறுவனம் தொடங்கிய 68 ஆண்டுகளில், 75 ஆயிரம் ரெயில் பெட்டிகள் என்பது பெருமைமிகு சாதனை என்று இந்திய ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. இதில், 875 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரெயில் பெட்டிகளும் அடங்கும். ஐ.சி.எப். உருவாக்கிய 75 ஆயிரமாவது ரெயில் பெட்டியை ஐ.சி.எப். பொதுமேலாளர் சுப்பராவ், நேற்று பார்வையிட்டு, ரெயில் பெட்டியை உருவாக்கிய தொழிலாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இந்த 75 ஆயிரமாவது ரெயில் பெட்டி, 69-வது வந்தே பாரத் ரெயிலுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதுவரை, ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 75 ஆயிரம் பெட்டிகளில் 752 வந்தே பாரத் ரெயில் பெட்டி, 12 வந்தே மெட்ரோ ரெயில் பெட்டி, 6 ஆயிரத்து 895 எல்.எச்.பி. குளிர்சாதன பெட்டிகளும், 8 ஆயிரத்து 152 சாதாரண எல்.எச்.பி. பெட்டிகளும் அடங்கும். மேலும், ஐ.சி.எப். தொழிற்சாலை தொடங்கியது முதல் 1955-2015-ம் ஆண்டு வரையில் 49 ஆயிரத்து 588 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015 ஆண்டு முதல் தற்போது வரையில் 25 ஆயிரத்து 412 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News