பிரதமர் மோடி இன்று நெல்லை வருகை: பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
- அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு.
- நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரிப்பு
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்றுடன் இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேசிய கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் மாவட்டந்தோறும் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடும் பா.ஜனதா வெற்றி முனைப்பில் தீவிர வாக்கு வேட்டை நடத்தி வருகிறது.
வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி வரை 7 முறை தமிழகத்திற்கு வந்து பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பேசியுள்ள நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக இன்று நெல்லை வருகிறார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களிடையே பேச உள்ளார். அவர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே நெல்லையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இந்நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக அவர் நெல்லைக்கு மீண்டும் வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பொதுக்கூட்டத்தில் குமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மற்றும் தென்காசி தொகுதி கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரதமர் மோடி பேச உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.