போலி பயிற்சி மையம் தொடங்கி பெண்களிடம் ரூ.10 லட்சம் வசூல் செய்த நபர் தலைமறைவு
- சுய தொழில் பயிற்சியில் சேர ஒரு நபருக்கு ரூ.5000/-வசூலிக்கப்பட்டது.
- பெண்கள் பயிற்சி மையத்தை தொடங்கி பணத்தை வசூலித்த சுந்தரத்தின் செல்போனில் தொடர்பு கொண்டனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் உள்ள மணிமேகலை தெருவில் உதயா டிரேடர்ஸ் தொழிற்பயிற்சி மையத்தை மதுரையை சேர்ந்த சுந்தரம் என்பவர் நடத்தி வந்தார்.
இங்கு அளிக்கப்பட்ட சுய தொழில் பயிற்சியில் சேர ஒரு நபருக்கு ரூ.5000/-வசூலிக்கப்பட்டது. மேலும், பயிற்சி முடித்தவர்கள் உற்பத்தி செய்யும் கப் சாம்பிராணி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, கிரயான்ஸ், கலர் பென்சில் போன்ற பொருட்களை எங்களிடமே விற்று மாதம் ரூ.30 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம், இதற்கான பயிற்சி அனைத்தும் இலவசம் எனவும் கூறி, ஒரு நாளைக்கு 875 ரூபாய் வருமானம் வரும் என்று கூறி விளம்பரம் செய்தார்.
இதனை நம்பி விருத்தாசலத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் தலா ரூ.5000/-என சுந்தரத்திடம் கொடுத்தனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கப்படுமென பணம் கட்டிய பெண்களிடம் சுந்தரம் கூறியுள்ளார். இதனையேற்ற பெண்கள் பயிற்சி வகுப்பில் சேர சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர்.
அப்போது அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்ட பெண்கள் பயிற்சி மையத்தை தொடங்கி பணத்தை வசூலித்த சுந்தரத்தின் செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் சுந்தரத்தில் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பயிற்சி பெற பணம் செலுத்திய பெண்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனை அடுத்து பணம் கொடுத்து ஏமாந்ததை அறிந்த பெண்கள், கண்ணீர் மல்க தங்களின் குடும்பத்தாருடன் பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு உருவானது. இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பயிற்சி மையத்தின் பூட்டை உடைத்த போலீசார், பயிற்சி மையத்திற்குள் சென்றனர். அங்கு எந்த பொருட்களும் இல்லாமல் காலியாக இருந்தது.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து புகாரினை பெற்று, பயிற்சி மையத்தை தொடங்கி பெண்களிடம் பணம் வசூல் செய்த சுந்தரம் மீது போலீ சார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான சுந்தரத்தை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.