வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு பிரதமர் மோடி செயல்படுகிறார்- அண்ணாமலை
- நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எந்த குடும்பத்தில் இதுவரை அரசு வேலை சேரவில்லையோ அந்த குடும்பத்திற்கு அரசு வேலை எட்டிப் பார்க்கும்.
- தி.மு.க.வை போல ஆண்டு தோறும் அடையாறு ஆற்றை சுத்தப்படுத்துவதாக பொய் சொல்லி அடிக்கடி நிதியை ஒதுக்க மாட்டோம்.
கரூர்:
கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தில் 100-வது நாளாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்ற 'என் மண், என் மக்கள்' நடை பயணம் நேற்று மாலை நடை பெற்றது. சின்னதாராபுரம் நேரு நகரில் கரூர் மெயின் சாலையில் தொடங்கிய இந்த நடை பயணத்திற்கு வந்த மாநில தலைவர் அண்ணாமலைக்கு கரூர் மாவட்டத்தலைவர் வி.வி.செந்தில்நாதன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
அரவக்குறிச்சி சட்ட மன்றத் தொகுதி இணை அமைப்பாளரும், கரூர் மாவட்டச் செயலாளருமான ஆர்.வி.எஸ்.செல்வராஜ் வரவேற்றார். முன்னாள் எம்.பி.யும், மாநில துணைத் தலைவருமான கேபி.ராமலிங்கம், மாநில நிர்வாகி சிவசுப்ரமணியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
2024 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. தமிழகம், புதுச்சேரியிலும் 40 தொகுதிகளையும் வெல்வோம். அரசியலில் நல்ல மனிதர்கள் சேவை செய்வதற்காக வருவார்கள் என்ற எதிர்பார்ப்பை இந்த யாத்திரை உருவாக்கியிருக்கிறது.
தமிழகத்தில் இப்போது இருக்கும் அரசியலில் இருந்து தமிழகம் வெளியே வரவேண்டும். ஊழல் ஆட்சி, குடும்ப ஆட்சி, தனி மனிதனை போற்றி போற்றி கடவுளாக உயர்த்தி, சாமானிய மக்கள் எல்லாம் அரசியலில் இருந்து ஒதுக்கும் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
செந்தில் பாலாஜி 280 நாட்களை தாண்டி சிறைச் சாலையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்து கொண்டு, அவருக்கு மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் போய்க் கொண்டிருந்தது. அண்மையில்தான் அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லி இருக்கின்றார்.
அவரது சகோதரர் இன்னும் பிடிபடவில்லை. இது தமிழகத்தினுடைய காவல்துறைக்கு தலைகுனிவா அல்லது ஊழல்வாதிகளுக்கு காவல்துறை ஒத்துழைக்கிறதா என தெரியவில்லை. அரவக் குறிச்சி தொகுதியில் தொழிற் சாலைகள் கிடையாது, தண்ணீர் கிடையாது, நீர் மேலாண்மை கிடையாது.
மூன்று நதிகள் அருகில் பாய்ந்தும் வானம் பார்த்த பூமியாக இருக்கிறது. இந்த நிலை பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போது மாறும். வளர்ச்சி மட்டுமே தன்னுடைய ஒற்றை குறிக்கோளாக இருந்து ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி நடத்திக் கொண்டிருக்கிறார்.
மத்தியில் 76 மந்திரிகள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு குண்டூசியை திருடிவிட்டார்கள், மக்களுடைய வரிப்பணத்தை ஒரு ரூபாய் சாப்பிட்டுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதா என்பதை சிந்தித்து பாருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எந்த குடும்பத்தில் இதுவரை அரசு வேலை சேரவில்லையோ அந்த குடும்பத்திற்கு அரசு வேலை எட்டிப் பார்க்கும்.
எல்லா குழந்தைகளுக்கும் தரமான கல்விக்கொடுப்போம். டாஸ்மாக்கிற்கு தடை விதித்து, கள் விற்பனையை கொண்டுவருவோம். தி.மு.க.வை போல ஆண்டு தோறும் அடையாறு ஆற்றை சுத்தப்படுத்துவதாக பொய் சொல்லி அடிக்கடி நிதியை ஒதுக்க மாட்டோம். கமிஷன் அடிப்பதற்கே பட்ஜெட் அவர்கள் போடுகிறார்கள்.
மேலும் பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்போது, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 நவோதயா பள்ளிகளை கொண்டு வருவோம். இந்த பள்ளிகளுக்கு காமராஜர் பெயரை வைப்போம். காவல் துறையை மறுசீரமைப்போம்.
2 கட்சிகளும் வேண்டாம் என்கின்ற நிலைப்பாட்டில் பா.ஜ.க. நின்று கொண்டிருக்கிறது. ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். 2024-ல் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டு, 2026 தேர்தலை முடிவு செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பா.ஜ.க. மாநில மகளிரணி துணைத்தலைவர் மீனா வினோத்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் சக்தி வேல்முருகன் உள்ளிட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.