தமிழ்நாடு

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் என்.எல்.சி. நிறுவனம்- ராமதாஸ் கண்டனம்

Published On 2024-09-02 08:38 GMT   |   Update On 2024-09-02 08:38 GMT
  • எந்த ஒரு நிறுவனத்தின் லாபம் அதிகரித்தாலும், அதன் பயன்கள் மனித வளத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
  • அளவுக்கு அதிகமாக வேலை வாங்குவது மூலம் என்.எல்.சி நிறுவனம் பெரும் பணத்தை மிச்சம் செய்கிறது.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பாட்டாளி மக்கள் வழங்கிய நிலங்களை ஆதாரமாகக் கொண்டு தொடங்கப்பட்ட என்.எல்.சி நிறுவனம், இப்போது இந்தியாவின் மிகப்பெரிய நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. 2023-24-ம் ஆண்டில் என்.எல்.சி நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.2,787 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,846 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் என்.எல்.சி நிறுவனத்தின் வருவாய் ரூ.3,376 கோடியாகவும், லாபம் ரூ.559.42 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது.

எந்த ஒரு நிறுவனத்தின் லாபம் அதிகரித்தாலும், அதன் பயன்கள் மனித வளத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால், என்.எல்.சி நிர்வாகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. அதிக லாபம் ஈட்டி உள்ள என்.எல்.சி நிறுவனம் அதன் தொழிலாளர்களுக்கு இயல்பாக வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கூட வழங்க மறுக்கிறது. என்.எல்.சி நிறுவனம் இந்த அளவுக்கு லாபம் ஈட்டுவதற்கு காரணமாகத் திகழும் அதன் தொழிலாளர்கள் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவதற்குக் கூட என்.எல்.சி நிறுவனம் மறுத்து வருவது அடிப்படை மனித உரிமைகளுக்கும், தொழிலாளர் நல விதிகளுக்கும் எதிரானது ஆகும்.

என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்யாமல், அவர்களை ஒப்பந்த ஊழியர்களாகவே வைத்திருந்து அவர்களுக்கு நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட பாதிக்கும் குறைவான ஊதியத்தை வழங்குவது, ஓய்வுக்குப் பிந்தைய உரிமைகளை வழங்க மறுப்பது, அளவுக்கு அதிகமாக வேலை வாங்குவது ஆகியவற்றின் மூலம் என்.எல்.சி நிறுவனம் பெரும் பணத்தை மிச்சம் செய்கிறது. என்.எல்.சி.யின் லாபம் அதிகரிக்க தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலும் ஒரு காரணம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News