தமிழ்நாடு (Tamil Nadu)

கொசு ஒழிப்பு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

Published On 2024-10-19 05:47 GMT   |   Update On 2024-10-19 05:47 GMT
  • ஒரு பணியாளர் குறைந்தபட்சம் 240 நாட்கள் தொடர்ந்து பணியாற்றினால் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும்
  • பத்தாண்டுகளை நிறைவு செய்த தற்காலிக தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக பணி நிலைப்பு வழங்க வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளுக்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் நிலையில், அவர்களில் பலர் பணி நிலைப்பு கோரி நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்வதாகவும், அதனால், அவர்கள் ஒரு மாதம் பணியாற்றினால் , அடுத்த மாதம் பணி வழங்கக்கூடாது என்றும் தமிழக அரசு ஆணையிட்டு உள்ளது. சமூக நீதிக்கும், மனித நேயத்திற்கும் எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

ஒரு பணியாளர் குறைந்தபட்சம் 240 நாட்கள் தொடர்ந்து பணியாற்றினால் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். நிரந்தரப்பணி என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமையாகும். ஆனால், அதை வழங்க மறுக்கும் தமிழக அரசு, பணியாளர்கள் பணி நிலைப்பு கோருவதால் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு மேல் பணி வழங்கக்கூடாது என்பது தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பார்க்கும் எஜமானர் மன நிலையையே காட்டுகிறது. சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் தி.மு.க. அரசு, எவ்வளவு மோசமான சமூகநீதி படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசுப் பணியாளர்களை ஒடுக்குவது, தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை நிர்ணயம் செய்வது என தொழிலாளர் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் தி.மு.க. அரசு, இனியாவது அதன் அநீதிகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்குவதுடன், பத்தாண்டுகளை நிறைவு செய்த தற்காலிக தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக பணி நிலைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News