8 ஆண்டாக சாலை அமைக்காததால் மண் பாதையாக மாறியது: பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் அவதி
- சாலையானது கடந்த 8 ஆண்டுக்கு முன்பு போடப்பட்டதாக தெரிகிறது.
- மக்களால் பிராதானமாக பயன்படுத்தும் இந்த சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 55-வது வார்டு, தாம்பரம்-சோமங்கலம் சாலையில் சமத்துவ பெரியார் நகர் உள்ளது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.
இப்பகுதி அடையாறு மற்றும் பாப்பன்கால்வாய் இணையும் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள ராகவேந்திரா பிரதான சாலை சுமார் 740 மீட்டர் தூரத்துக்கு படு மோசமடைந்து மண்பாதையாக காட்சி அளிக்கிறது. தார்சாலை அமைக்கப்பட்ட தற்கான எந்த சுவடுகளும் அங்கு இல்லை. அப்பகுதி மக்களால் பிராதானமாக பயன்படுத்தும் இந்த சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் சாலையே தெரியாத அளவுக்கு சேறும் சகதியுமாக மாறி காட்சி அளிக்கிறது. இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சாலை கடந்த 8 ஆண்டுக்கு முன்பு போடப்பட்டதாக தெரிகிறது. இதன்பின்னர் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
சேதம் அடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வராததால் பொதுமக்களே ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தற்காலிகமாக கற்களை கொண்டு சமன் செய்து வருகிறார்கள்.
மேலும்பருவ மழை காலத்தில் தாழ்வான இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்படும். அந்த நேரத்தில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் இந்த பகுதிக்கு வந்து அடையாறு ஆற்றங்கரைமற்றும் பாப்பன்கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்வது வழக்கம். ஆனாலும் இங்கு சாலை அமைக்க இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து சமத்துவ பெரியார் நகர் பகுதி மக்கள் கூறியதாவது:-
இந்த பெரியார் நகர் பகுதி , அரசு பல இடங்களில் நிலம் கையகப்படுத்தும் போது பொது மக்களுக்கு வழங்கப்பட்ட இடமாகும்.. கடந்த 2009-ம் ஆண்டு இந்தசாலை அப்போதைய பெருங்களத்தூர் பேரூராட்சியிடம் ஒப்ப டைக்கப்பட்டது. அப்போது 2015-ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் நிதியில் 740 மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலை அமைத்து கொடுத்தனர். இதன் பின்னர் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைந்தது. எனினும் இதுவரை இந்த சாலை சீரமைக்கப்படாமல் மண்பாதையாக மாறி காட்சி அளிக்கிறது. 8 ஆண்டாக மிகவும் மோசமான நிலையில் காணப்படும் இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி பலமுறை தாம்பரம் மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக சாலை மேலும் சேதம் அடைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அடையாறு ஆற்றங்கரையில் உள்ள இப்பகுதியை பலமுறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது சிறு மழைக்கே சாலை சேறும் சகதியுமாக மாறி பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. பருவ மழைக்கு முன்பு சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.