தமிழ்நாடு

தாராபுரம்-பல்லடத்தில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்: மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Published On 2023-08-11 07:02 GMT   |   Update On 2023-08-11 07:02 GMT
  • மாத சம்பளம் 4 அல்லது 5ந்தேதிக்குள் வந்து கொண்டிருந்தது. தற்போது 11ந் தேதி ஆகியும் சம்பளம் போடப்படவில்லை.
  • தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா ரமேஷ்,14 வது வார்டு உறுப்பினர் ஈஸ்வரி செல்வராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு அளித்தனர்.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகளில் சுமார் 56,000 மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் 36, ஒப்பந்த அடிப்படையில் 181 பேர் பணிபுரிந்து வருகின்றனர். பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை தனித்தனியாக பிரித்து வாங்குவதற்கு தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாள்தோறும் 18 வார்டுகளில் வீதி வீதியாக சென்று வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியாருக்கு விடப்பட்டுள்ளது. இதற்கு தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், பல கட்டங்களாக போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பல்லடம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை எனக்கூறி, பல்லடம் பேருந்து நிலையத்தில் இன்று காலை அனைவரும் ஒன்றாக கூடி வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தனர்.

இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-

மாத சம்பளம் 4 அல்லது 5ந்தேதிக்குள் வந்து கொண்டிருந்தது. தற்போது 11ந் தேதி ஆகியும் சம்பளம் போடப்படவில்லை. இதனால் செலவுக்கு பணம் இல்லாமல் கடும் அவதிப்படுகிறோம். ஏற்கனவே குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகிறோம். இந்த நிலையில் கொடுக்கும் சம்பளத்தையும் சரியாக தருவதில்லை. எனவே இதனை கண்டித்து வேலைநிறுத்தம் செய்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா ரமேஷ்,14 வது வார்டு உறுப்பினர் ஈஸ்வரி செல்வராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு அளித்தனர். தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பல்லடம் நகராட்சி பகுதியில் பல இடங்களில் குப்பைகள் மலைபோல் தேங்கின.

தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 145 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தினசரி கூலியாக ரூ.440 வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூரில் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ரூ.540, கோயம்புத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ரூ. 570 வழங்கப்படுகிறது. அதுபோல் கூலி வழங்க வேண்டும். கூலியை சரியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை தாராபுரம் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள நகராட்சிகள் கூடுதல் அதிகாரியிடம் புகார் அளிப்பதற்காக வாகனங்களில் சென்றனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தால் தாராபுரத்தில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன. 

Tags:    

Similar News