தமிழ்நாடு

தி.மு.க. நடத்தும் ஆட்சியைப் பார்த்து நிம்மதியாக தூக்கம் கூட வரவில்லை- சசிகலா

Published On 2023-01-10 04:33 GMT   |   Update On 2023-01-10 04:33 GMT
  • தி.மு.க. ஆட்சியில் நகரங்களில் ஒருத்தரும் புதிதாக கடை வைக்க முடியாது.
  • அம்மா இருந்தபோது எப்படி இருந்தது தமிழகம். இதே காவல்துறையை வைத்து தானே அன்றைக்கு ஆட்சியை நடத்தினோம்.

செங்கல்பட்டு:

ஜெயலலிதா தோழி சசிகலா செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பல இடங்களில் நடந்த கூட்டங்களில் அவர் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் நகரங்களில் ஒருத்தரும் புதிதாக கடை வைக்க முடியாது. அப்படி வைத்தால் தி.மு.க.வினர் வந்து மிரட்டுவதுதான் வேலை.

ஒரு சிறிய வீடு கட்டுவதற்கு மணலோ, ஜல்லியோ வைத்தால் பணம் கொடு என்று தி.மு.க.வினர் பொதுமக்களை மிரட்டுகிறார்கள். பணம் கொடுத்தால்தான் வீடு கட்ட முடியும் என்ற நிலை. இதற்கெல்லாம் காரணம் உங்கள் பதவி படுத்தும் பாடு. அந்த பதவியை எடுத்தால் எல்லாம் சரியாகி விடும்.

அம்மாவின் ஆட்சி வந்தால் மீண்டும் பழைய நிலைக்கு வரும். அது மட்டுமல்ல தி.மு.க. கவுன்சிலர்களை முதலில அடக்கி வைக்க வேண்டும். என்ன காரணம் என்றால், ஒவ்வொருத்தரையும் போன் செய்து மிரட்டுவதுதான் வேலை.

இப்போது கூட்டணி கட்சிகள் எல்லாம் உன்னுடன் இருப்பதால் அவர்கள் வாயை அடைக்கலாம். ஆனால் என்னுடைய வாயை அடைக்க முடியாது. இந்த மக்களுக்காக என் உயிர் உள்ளவரை தட்டிக்கேட்பேன். ஏன் என்றால் நாங்கள் அப்படிதான் வளர்ந்திருக்கிறோம். 30 வருட அரசியலில் நாங்கள் இதைத்தான் செய்திருக்கிறோம்.

அம்மா இருந்தபோது எப்படி இருந்தது தமிழகம். இதே காவல்துறையை வைத்து தானே அன்றைக்கு ஆட்சியை நடத்தினோம். இப்போது தி.மு.க.வால் ஏன் நடத்த முடியவில்லை. என்ன காரணம் என்பதை யோசித்து பாருங்கள். மக்களை தாக்குவதற்கோ, மிரட்டுவதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது.

எந்த சமயத்தில் தி.மு.க.விற்கு பாடம் புகட்ட வேண்டுமோ அந்த சமயத்தில் மக்கள் சரியாக செய்ய வேண்டும். அம்மா மிகவும் கஷ்டப்பட்டு நல்ல நிலைக்கு தமிழகத்தை கொண்டு வந்து வைத்தால், தி.மு.க. ஆட்சி இப்போது செய்வதை பார்த்தால் எனக்கு ஒருநாள் கூட நிம்மதியாக தூக்கம் என்பதே வருவதில்லை. என்ன இப்படி கொடுமை செய்கிறார்களே என்று எனக்கு கஷ்டமாக இருக்கிறது.

அராஜகம் செய்யும் தி.மு.க.வினர் 4 பேரை கைது செய்தால் தானே மற்றவர்கள் செய்யாமல் இருப்பார்கள். அதை செய்வதற்கு தி.மு.க. பயப்படுவது ஏன்? அது போன்று பயப்படுபவர்கள் எல்லாம் பதவிக்கு வரக்கூடாது. பயந்தால் எப்படி காவல்துறையை வைத்து பணிகளை செய்ய முடியும்? நானும் பலமுறை நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லி விட்டேன். தமிழக மக்களே நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ளுங்கள். இந்த ஆட்சிக்கு என்ன பாடம் புகட்ட வேண்டும் என்பதை மனதில் வைத்து அதற்கான தக்க சமயம் வரும்போது மக்கள் தெளிவாக பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News