தமிழ்நாடு

நீங்கள் பேசியது உங்களுக்கே நினைவில்லையா? சவுக்கு சங்கர் வழக்கில் காரசார வாதம்

Published On 2022-09-08 13:27 GMT   |   Update On 2022-09-08 15:06 GMT
  • ஆறு வார கால அவகாசம் தேவை என சவுக்கு சங்கர் தரப்பில் பதில் தரப்பட்டது.
  • எவ்வித பதிவையும் பதிவிடமாட்டேன் என உறுதி அளித்தால் கால அவகாசம் வழங்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை:

ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளதாக யூடியூபில் விமர்சித்த சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

விசாரணைக்காக நேரில் ஆஜரான சவுக்கு சங்கர், தான் பேசிய வீடியோ பதிவு அல்லது தட்டச்சு பதிவை வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'வீடியோவை வெளியிட்டது, பேசியது நீங்கள்.. உங்களுக்கு அவற்றின் நகல் தேவையா?' என கேள்வி எழுப்பினர். சவுக்கு சங்கர் தரப்பில், ஆம் என பதில் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வீடியோவின் நகல்களை வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து வாதாடிய சங்கர் தரப்பு சார்பில், இது எந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு? புதியதா, பழையதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், நீங்கள் பேசியது உங்களுக்கு நினைவில்லையா? என கேள்வி எழுப்பினர். அதற்கு, தான் பல பேட்டிகளை வழங்கி உள்ளதாகவும், அனைத்தையும் நினைவில் கொள்ள இயலாது என்பதால் ஆறு வார கால அவகாசம் தேவை என சவுக்கு சங்கர் தரப்பில் பதில் தரப்பட்டது.

இதுகுறித்து எவ்வித பதிவையும் பதிவிடமாட்டேன் என உறுதி அளித்தால் கால அவகாசம் வழங்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் உறுதி வழங்க இயலாது என சவுக்கு சங்கர் தரப்பில தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரங்களிலும் இன்றும் நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லை என சவுக்கு சங்கர் குறிப்பிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன், ஒரு வாரத்திற்கு (செப்டம்பர் 15ம் தேதி) வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News