தமிழ்நாடு (Tamil Nadu)

காரைக்குடியில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி உயிரிழப்பு

Published On 2023-11-06 05:25 GMT   |   Update On 2023-11-06 10:34 GMT
  • அரசு மருத்துவமனையில் மாணவி மேகனாவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • மாணவி உயிரிழப்பிற்கு காரணம் காய்ச்சலா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்று சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 3-வது வீதியை சேர்ந்தவர் பாண்டி. இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர்.

அதில் ஒருவரான மேகனா (வயது 13) அதே பகுதியில் உள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது.

உடனடியாக அவரது பெற்றோர் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் அவருக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து ஓய்வெடுக்க கேட்டுக்கொண்டனர்.

ஆனாலும் காய்ச்சல் சரியாகவில்லை. தொடர்ந்து அதிகமானதோடு நேற்று இரவு அபாய கட்டத்திற்கு சென்றார். இதனால் பதட்டம் அடைந்து காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தந்தை பாண்டி மகளை அழைத்துச் சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் மேகனா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பிணமாக வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

முன்னதாக அரசு மருத்துவமனையில் மாணவி மேகனாவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் வெளியாகும் முன்பு அவர் பலியாகி விட்டார். இருந்த போதிலும் மாணவியின் உயிரிழப்பிற்கு காரணம் காய்ச்சலா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்று சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News