இறந்த 95 வயது மூதாட்டியின் கண்கள் தானம்- ஆசையை மகன்கள் நிறைவேற்றினர்
- நான் இறந்த பிறகு கண்களை தானம் செய்ய வேண்டும் என்று மகன்கள் மற்றும் பேரன்களிடம் அடிக்கடி கூறிவந்தார்.
- தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், அப்பர்சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் அம்சவள்ளி (வயது 95). இவருக்கு ரவி (76) அன்பழகன்(72) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அம்சவள்ளி தனது மகன்கள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளுப்பேத்தி என 3 தலைமுறை குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்ந்து வந்தார்.
அவர், தனது இறப்புக்கு பின்னர் பிறர் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். எனவே நான் இறந்த பிறகு கண்களை தானம் செய்ய வேண்டும் என்று மகன்கள் மற்றும் பேரன்களிடம் அடிக்கடி கூறிவந்தார்.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக அம்சவள்ளி திடீரென இறந்தார். இதைத்தொடர்ந்து அம்சவள்ளியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது கண்களை தானமாக வழங்குவதாக அவரது மகன்கள் தெரிவித்தனர். இது குறித்து தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
டாக்டர்கள் பரிசோதித்தபோது அம்சவள்ளியின் கண்கள் நல்ல நிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து அவரது கண்கள் தானமாக பெறப்பட்டது.