தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் தென்மாநில அளவிலான யானைகள் கணக்கெடுப்பு பணி

Published On 2023-05-16 06:05 GMT   |   Update On 2023-05-16 06:05 GMT
  • தென் மாநிலங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
  • யானைகள் கணக்கெடுப்பில் ஜி.பி.எஸ். கருவி திசை காட்டும் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தப்பட உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் பொது வன விலங்குகள் கணக்கெடுப்பு நடத்தும் போது, யானைகளின் எண்ணிக்கையும் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் மே 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் யானைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேசிய யானைகள் கணக்கெடுப்பில் கர்நாடகம் முதல் இடத்தையும், கேரளம் 3-ம் இடத்தையும், தமிழகம் 4-ம் இடத்தையும் பிடித்திருந்தது. தற்போது நடைபெற உள்ள கணக்கெடுப்பில் தென்மாநிலங்களில் யானைகளின் எண்ணிக்கை கனிசமான அளவு உயர்ந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர், தன்னார்வலர்கள் என 120 பேர் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் நடந்தது. இந்த பயிற்சி முகாமை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர், யானைகள் கணக்கெடுப்பில் ஜி.பி.எஸ். கருவி திசை காட்டும் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் துல்லியமாக யானைகள் குறித்த தகவல்களை அறிய முடியும். கணக்கெடுப்பு பணி முடிந்ததும், விபரங்கள் முதுமலை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும், என்றார்.

Tags:    

Similar News