தமிழ்நாடு

மாணவி நேத்ரா

கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து சாதனை படைப்பது எனது நோக்கம்- மாணவி நேத்ரா பேட்டி

Published On 2023-06-27 02:54 GMT   |   Update On 2023-06-27 02:54 GMT
  • என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
  • என்ஜினீயரிங் படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுக்க உள்ளேன். அதில் பல சாதனைகள் படைப்பது என்னுடைய நோக்கமாக உள்ளது.

திருச்செந்தூர்:

என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பா.நேத்ரா மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

மாணவி பா.நேத்ராவுக்கு சொந்த ஊர் சிறுத்தொண்டநல்லூர் ஆகும். இவரது பெற்றோர் பாலன், வித்யாகாந்தி. மாணவி கடந்த கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்வில் 598 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். தற்போது, என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து மாணவி பா.நேத்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னுடைய படிப்புக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த பள்ளியின் முதன்மை முதல்வர், முதல்வர், ஆசிரியர்கள், என்னுடைய பெற்றோர்கள் அனைவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என்ஜினீயரிங் படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுக்க உள்ளேன். அதில் பல சாதனைகள் படைப்பது என்னுடைய நோக்கமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தர்மபுரி மாவட்டம் ஜடையம்பட்டி கிராமத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ஹரிணிகா என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 2-வது இடம் பிடித்துள்ளார்.

இந்த மாணவி பிளஸ்-2 தேர்வில் 597 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி ஹரிணிகாவின் தந்தை மோகன் விவசாயம் செய்து வருகிறார். தாயார் திலகம். ஹரிணிகாவிற்கு மோனிஷ் என்ற அண்ணன் உள்ளார்.

இதுதொடர்பாக மாணவி ஹரிணிகா கூறியதாவது:-

என்ஜினீயரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலில் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் மாநில அளவில் 2-வது இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. மாநில அளவில் 2-ம் இடம் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக நான் நன்றாக படித்தேன். கணினி என்ஜினீயரிங் படிப்பை படித்து சாப்ட்வேர் என்ஜினீயர் ஆகி அந்த துறையில் சாதிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி லால்குடி மேலவாளாடியை சேர்ந்த மாணவி ரோஷினி பானு என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளார். இவர் கல்லணைரோடு வேங்கூரில் உள்ள செல்லம்மாள் மெட்ரிக்குலேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். பிளஸ்-2 தேர்வில் இவர் 600-க்கு 597 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவருடைய தந்தை ஷானவாஸ். இவர் பொன்மலை ரெயில்வே பணிமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தாய் ரெஹானா பேகம்.

மாணவி ரோஷினிபானு கூறுகையில், "தரவரிசை பட்டியலில் 3-ம் இடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளியில் ஆசிரியர்கள் என்னை நன்றாக ஊக்குவித்தார்கள். தினந்தோறும் தேர்வு நடத்தினார்கள். தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்து பள்ளி செல்லும் வரை படிப்பேன். பின்னர் பள்ளி விட்டு வீடு திரும்பியதும் இரவு 10 மணி வரை படித்து வந்தேன். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து, தகவல் தொழில்நுட்ப துறையில் சாதிக்க விரும்புகிறேன்" என்றார்.

Tags:    

Similar News