வில்லிவாக்கத்தில் இருந்து மூர்மார்க்கெட் வரை புறநகர் மின்சார ரெயில்கள் இன்று முதல் விரைவு பாதையில் இயக்கம்
- சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் விஸ்வநாத், புறநகர் ரெயில் சேவைகளின் நெரிசலை குறைக்க உதவும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
- புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை வந்த ரெயில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வேலைக்காகவும், பல்வேறு பணிகள் காரணமாகவும் சென்னைக்கு வந்து செல்கிறார்கள். இவர்கள் அனைவரும் புறநகர் மின்சார ரெயில்களையே நம்பி உள்ளனர். புறநகர் மின்சார ரெயில்களில் ஏறி சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் வேலைக்கு வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் இருந்து சென்னை மூர்மார்க்கெட் வளாகத்துக்கு வரும் புறநகர் மின்சார விரைவு ரெயில்கள் கடந்த 2020-ம் ஆண்டு கோவிட் தொற்றுக்கு பிறகு மெதுவான பாதையில் இயக்கப்பட்டன.
குறிப்பாக இந்த ரெயில்கள் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து மெதுவான பாதையில் இயக்கப்பட்டதால் மூர்மார்க்கெட் வளாகத்தை அடைவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து வேலைக்கு செய்பவர்கள் தாமதமாக அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதையடுத்து புறநகர் மின்சார ரெயில்களை விரைவுப் பாதையில் இயக்க வேண்டும் என்று திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கனக்கான பயணிகள் ரெயில்வே நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையை ரெயில்வே நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. புறநகர் மின்சார விரைவு ரெயில்கள் இன்று முதல் வில்லிவாக்கத்தில் இருந்து விரைவுப்பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் விஸ்வநாத், புறநகர் ரெயில் சேவைகளின் நெரிசலை குறைக்க உதவும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்தார். அதன்படி இன்று முதல் புறநகர் மின்சார விரைவு ரெயில்கள் விரைவுப் பாதையில் இயக்கப்பட்டன.
இதனால் புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை வந்த ரெயில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.