தமிழ்நாடு

குடிநீர், சொத்துவரி செலுத்த அனைத்து வீடுகளுக்கும் தனித்தனி 'கியூ ஆர் கோடு': தாம்பரம் மாநகராட்சி அறிமுகம்

Published On 2023-09-14 06:51 GMT   |   Update On 2023-09-14 06:51 GMT
  • செல்போனில் ஸ்கேன் செய்து பொதுமக்கள் தங்களது குறைகளையும் தெரிவிக்கும் வகையில் புதிய செயலி தயார் செய்யப்பட்டு இருக்கிறது.
  • பரிசோதனை அடிப்படையில் முதல் கட்டமாக 48-வார்டு பகுதியில் அனைத்து வீடுகளிலும் கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்டு வருகிறது.

தாம்பரம்:

தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் உள்ளிட்ட சேவைகளுக்கு கியூ.ஆர். கோடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அதனை செல்போனில் ஸ்கேன் செய்து பொதுமக்கள் தங்களது குறைகளையும் தெரிவிக்கும் வகையில் புதிய செயலி தயார் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள இந்த செயலி தாம்பரம் மாநகராட்சியின் 48-வது வார்டில் சோதனை முறையில் அறிமுகம் செய்து உள்ளனர். இந்த வார்டில் உள்ள 2976 குடியிருப்புகளில் முதல் கட்டமாக 1500 குடியிருப்புகளில் கியூ.ஆர். கோடு குறியீடு அட்டை ஒட்டப்பட்டு இருக்கிறது. இதனை முக்கியமாக திடக்கழிவு மேலாண்மைக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.

துப்புரவு ஊழியர்கள் ஒரு கட்டிடத்தில் ஒட்டப்பட்டு உள்ள கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து அங்கிருந்து சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டதா? இல்லையா? என்பதையும் பதிவிட முடியும். இதன் மூலம் பொதுமக்களுக்கு அன்றாடம் கிடைக்கக்கூடிய சேவை சரியாக செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க முடியும். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள், மருத்துவம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புகார் அளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, தாம்பரம் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர்வரி உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் ஒவ்வொரு வீடுகளுக்கு தனித்தனியாக கியூ.ஆர். கோடு உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தலாம். மேலும் இந்த கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் புகாராக தெரிவிக்க முடியும்.

பரிசோதனை அடிப்படையில் முதல் கட்டமாக 48-வார்டு பகுதியில் அனைத்து வீடுகளிலும் கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்டு வருகிறது. இதன் பின்னர் மாநகராட்சி முழுவதும் கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் பொதுமக்களின் வீண் அலைச்சல், நேர விரயம் தவிர்க்கப்படும் என்றார்.

Tags:    

Similar News