கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்
- அன்வர் ராஜா 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்தார்.
- 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார் அன்வர் ராஜா.
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள், விலகியவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதையடுத்து பலர் சேர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா இன்று காலையில் பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது மீண்டும் கட்சியில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தார். அவரது முடிவை வரவேற்று எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்தார்.
பின்னர் தலைமை கழகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு சென்று முறைபடி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
அன்வர்ராஜா 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்தார். 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவால் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தும் சசிகலாவுக்கு ஆதரவாகவும் பேட்டியளித்ததால் கடந்த 2021-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு எந்த பக்க மும் போகாமல் அமைதியாக இருந்து வந்த அன்வர் ராஜா இன்று மீண்டும் தாய் கழகத்தில் இணைந்துள்ளார்.